கடந்த வெள்ளிக் கிழமை ஏப்ரல் 5ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துக்க பிரின்சசு விருந்து மண்டபத்தில் தமிழர் மரபுகளை அடையாளப்படுத்தி பெற்னா தமிழ் விழா 2013இன் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழுயர நாமுயர்வோம், தமிழுயர நாம் இணைவோம் என்ற உறுதியோடு தமிழுக்கு எடுக்கப்படும் இவ்விழாவின் தொடக்க நிகழ்வைக் கனடியத் தமிழர் பேரவையின் தமிழ் ஊடகப் பேச்சாளரும் பெற்னா தமிழ் விழா 2013இன் சந்தைப் படுத்தற் குழுத் தலைவருமான திரு துரைரத்தினம் துசியந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் அழைப்பையேற்றுக் கனடியத் தமிழர் அங்கு கூடினர். ஊடகவியலாளர், குமுக ஆர்வலர், தமிழுணர்வாளர், தலைஞர், வர்த்தகர் மற்றும் தொழில் முனைவோரால் என அனைத்துத் தரப்பு மக்களாலும் நிகழ்வு நிறைந்து காணப்பட்டது.
பதலை மற்றும் பெருவங்கிய இசையுடன் ஆரம்பமான நிழ்வில் தமிழ் போற்றும் நடனமொன்றைச் செல்வி தர்சிகா சிறிதரன் அவர்கள் வழங்கினார். ஈழத்தின் விடியலுக்காய்த் தம்முயிர் ஈந்தோரை எண்ணியும் உலகெங்கும் விடுதலைக்காய் உயிர் தந்தோரை எண்ணியும் அமைதி வணக்கத்தோடு நிகழ்வு தொடர்ந்தது.
பெற்னா அமைப்பின் இயக்குனர் அவை உறுப்பினரும் பெற்னாத் தமிழ் விழா 2013இன் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான திரு பிரகல் திரு அவர்கள் ஆரம்ப உரையாற்றினார். கனடியத் தமிழர் பேரவை எடுத்த முயற்சியால் 25 ஆண்டுகளின் பின் இவ்விழா கனடாவில் இடம்பெறுகிறது. தமிழையும் தமிழரையும் போற்றும், ஏற்றும் விழாவாக இவ்வாண்டும் இவ்விழா அமைவதோடு தமிழ்நாட்டு உறவுகளையும் புலம்பெயர் ஈழத் தமிழரையும் பல கோணங்களில் இணைக்கும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என அவரது உரையிற் குறிப்பிட்டார். யூலைத் திங்கள் 5, 6, 7ஆம் நாட்களில் ரொறன்ரோ சொனி நடுவத்தில் நடைபெற இருக்கும் இவ் விழாவிற்கு அமெரிக்காவில் இருந்தும் உலகெங்கிலுமிருந்தும் வர இருக்கும் விருந்தினரை வரவேற்க ஆயத்தமாவோம் என அழைப்பு விடுத்தார்.
ரோறன்ரோச் சுற்றுலாத் துறை மற்றும் ஒன்ராறியோ மாநில அரசின் பங்கேற்றலோடு பெற்னா தமிழ் விழா 2013 கனடா வருகிறது. ஒன்ராறியோ மாகாண அரசின் குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் மதிப்புக்குரிய மைக்கல் கூட்ரோ அவர்கள் மாகாண முதல்வர் மதிப்புக்குரிய கத்தலின் வின் அவர்களின் வாழ்த்து மற்றும் வரவேற்புச் செய்தியை எடுத்து வந்தார். பெற்னாத் தமிழ் விழா 2013 ரொறன்ரோ வருவது மகிழ்வையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. இவ் விழா சிறப்புற ஒன்ராறியோ அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என அவர் உறுதியளித்தார். இந் நிகழ்விற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் ஒன்ராறியோவின் விளையாட்டு, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் மதிப்புக்குரிய மைக்கல் சான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஒன்ராறியோவின் வளர்ச்சிக்குப் பெற்னாத் தமிழ் விழா 2013 போன்ற விழாக்கள் மிக அவசியமானவை. இவ் விழா வெற்றிபெற அனைத்து ஒத்துழைப்பையும் மாகாண அரசு வழங்கும் என அவ்வறிக்கையில் அவர் குறுப்பிட்டிருந்தார்.
அடுத்த தலைமுறைத் தமிழரையும் அடையாளங் கண்டு அவரவர் புரிதலுக்கு ஒப்பாய் பல வடிவங்களில் - குறிப்பாய் கலை, இலக்கியம், மொழி, மரபு, பண்பாடு, குடும்பம், கல்வி, தொழிநுட்பம், வர்த்தகம், மருத்துவம் எனப் பல கோணங்களில் தமிமைக் கொண்டாட இருக்கும் இவ் விழாவின் அறிமுக நிகழ்வில் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வருகை தந்த பெற்னா தமிழ் விழா 2013இன் நிகழ்ச்சி குழுத் தலைவர் திரு சுந்தர் குப்புசாமி அவர்களும் பெற்னா அமைப்பின் துணைத் தலைவர் திரு நாஞ்சில் பீற்றர் அவர்களும் இணைந்து இவ்வாண்டு இடம்பெற இருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி விளக்கம் அளித்தனர். சினிமா மற்றும் கலைத்துறை சார்ந்தோர் சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காவே இவ் விழாவில் கலந்து கொள்வதாகவும் தமிழைப் போற்றும் உயர்த்தும் வகையிலேயே பல நிகழ்வுகள் அமைப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டனர். நிகழ்வில் உள்ளுர் ஆற்றல்களுக்கும் கலைஞருக்கும் முக்கிய இடம் வழங்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டைப்போலவும் இவ்வாண்டும் ஒரு தமிழாளரின் நூற்றாண்டு விழா இந் நிகழ்வின் முக்கிய பொருளாக அமைய உள்ளது. ஈழத்தமிழரும் தழிழ்த்தூது என போற்றப்படுபவரும் தமிழ்த் தொண்டருமான தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழா நினைவு கூரப்;படுகிறது. பெற்னா தமிழ் விழா 2013இல் முக்கிய நிகழ்வாக அமையும் அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்வுகள் தொடர்பாக தனிநாயக அடிகளாரின் விழாத் துணைக் குழு உறுப்பினர் திரு ராஜன் பிலிப் அவர்களும் விழாக் குழுத் தலைவர் திரு சிவன் இளங்கோ அவர்களும் விளக்கமளித்தனர்.
தொடர்ந்து திரு பிரகல் திரு அவர்கள் பெற்னா தமிழ் விழா 2013 ரொறன்ரோ வருவதை அறிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டார். இறுதியாக கருத்துப் பகிர்வும் ஐயம் நீக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. பெற்னா தமிழ்விழா 2013இன் விழா மலர்க் குழுத் தலைவரும் கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர் அவை உறுப்பினருமான திரு குமார் ரட்ணம் அவர்கள் தொகுத்து வழங்கிய இப் பகுதியில் பெற்னா தமிழ் விழா 2013இன் நிகழ்ச்சி குழுத் தலைவர் திரு சுந்தர் குப்புசாமி, பெற்னா அமைப்பின் துணைத் தலைவர் திரு நாஞ்சில் பீற்றர, பெற்னா தமிழ் விழா 2013இன் செயற்குழு உறுப்பினர் திருமதி புசுபா வில்லியம் ஆகியோரோடு பெற்னா அமைப்பின் இயக்குனர் அவை உறுப்பினரும் பெற்னாத் தமிழ் விழா 2013இன் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான திரு பிரகல் திரு அவர்களும் ஐயங்களைத் தெளிவுபடுத்தினர். பெற்னாத் தமிழ் விழா கனடா வருவது பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியது கருத்துப் பரிமாறிய குமுகத் தலைவர் பலர் தெரிவித்தனர்.
தமிழையும் தமிழரையும் உயர்த்தும் வகையிலும் எவரது உணர்வுகiயும் காயப்படுத்தாத வகையிலும் பெற்னா தமிழ் விழா 2013இன் நிகச்சிகள் அனைத்தும் அமைந்திருப்பதோடு அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழரையும் சரியான முறையில் அடையாங்கான வழிகோலுமென்ற உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
கூடிய விளக்கங்களுக்கும் தனிப்பட்ட நேர்காணல்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை 416 240 0078 அல்லது www.fetna2013.ca
நன்றி www.canadamirror.com
Geen opmerkingen:
Een reactie posten