சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருடன் பேச்சுக்களை நடத்தவே சிறிலங்கா அதிபர் பெய்ஜிங் செல்லவுள்ளார்.
பொறுப்புக்கூறல் விவகாரம் மற்றும், பொருளாதார வீழ்ச்சி என்பனவற்றால், சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவிடம் இருந்து மேலதிக உதவிகளைக் கோர சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழப்பினால், சிறிலங்காவின் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.
இந்தநிலையில், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதிலும், நலிந்து வரும் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதித் துறையை காப்பாற்ற சீனாவிடம் இருந்து ஜிஎஸ்பி சலுகையைப் பெறுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் ஆரம்பக்கட்டப் பேச்சுக்களும் நடத்தப்பட்டு, அதற்கு சீனத்தரப்பில் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் பயணத்தின் போது, இந்த விவகாரங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten