தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

நாமும் உரிமையோடு அமைதியாக வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம், அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் நாம் விரும்பவில்லை...!


முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் காப்பாற்ற தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்!- கருணாநிதி
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 03:14.35 PM GMT ]
தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை காப்பாற்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்யும் வழியை காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்
அத்துடன், புல்லருக்கு கருணை காட்டுமாறு பஞ்சாப் முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியதை தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறியிருப்பது மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் தூக்கு தண்டனையை மாற்ற முதலமைச்சர் முதல் அம்மாநில மக்கள் வரை அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்பதாக தெரிவித்துள்ள அவர், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய தனது முந்தைய அறிக்கையை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை காப்பாற்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதை கருணாநிதி சுட்டிக்காட்டிள்ளார்.
புல்லரின் தண்டனையை மறுபரிசீலனை செய்யும்போது, வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் மற்றும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் மூவரின் தூக்கு தண்டனையையும் இணைத்து பரிசீலித்து தண்டனையை மாற்றி அமைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமும் உரிமையோடு அமைதியாக வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம், அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் நாம் விரும்பவில்லை...
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 01:47.35 PM GMT ]
நாம் பாரம்பரியமாக வாழ்ந்த எமது சொந்த ஊரிலே நாமும் உரிமையோடுஅமைதியாக வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம்தேவையற்றஅடக்குமுறைகளையும் அடாவடிகளையும் நாம் விரும்பவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளைதெரிவித்தார்.
15ம் திகதி மாலை 3.00 மணிக்கு அமெரிக்க நாட்டு NOW-WOW அமைப்பின் நிதிப் பங்களிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பினூடாக, கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்தில் கல்விகற்கும் சகல மாணவர்களுக்கும் பாதணிகள் (சப்பாத்துக்கள்) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
நாமும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமையுடைய இனமாகத்தான் இருக்கிறோம். ஆனாலும் தமிழர்களாகிய எமக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று வெளியில் சொல்லளவில்தான் கூறப்படுகின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களைச் சந்திப்பதற்குக்கூட பல்வேறுபட்ட தடைகளும் அச்சுறுத்தல்களும்தான் காணப்படுகின்றன. இவ்விடத்தில்கூட பாருங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணிப்பது போலவும் குற்றவாளிகளைக் கண்காணிப்பதைப் போலவும் இந்த நாட்டின் படைவீரர்கள் எம்மைக் கண்காணிக்கிறார்கள். இதனால் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள்.
நாங்கள் என்ன தீவீரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகவா இவ்விடத்தில் கூடியுள்ளோம்? இந்தச் சின்னஞ்சிறார்களுக்கு அவர்களின் தேவை கருதி நாம் கொண்டு வந்த இந்தச் சப்பாத்துக்களை வழங்கிவிட்டுப் போவதற்குத்தான் வந்துள்ளோம்.
நாமும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதிக்கிறோம். கட்டுப்படுகிறோம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழ் மக்களாகிய எம்மீது அடக்கு முறைகளும், அடாவடிகளும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவதை ஒருபோதும் நாம் விரும்பவில்லை எமது சொந்த ஊரிலே நாமும் மனிதர்களாகத்தான் வாழ விரும்புகிறோம். அடிமைகளாக அல்ல.வன்னேரிக் குளத்தில் பல்வேறுபட்ட கஸ்ட துன்பங்கள் மத்தியில், வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்ற போதிலும் இந்தச் சிறார்கள் கல்வியில் உயர்வடையவே விரும்புகிறார்கள்.
இக்கிராமத்திற்கு என்றொரு கலை கலாசாரம் மிக்க தனித்துவம் உண்டு. இந்த மாணவர்களின் நலன் கருதித்தான் பாதணிகள் வழங்கப்படுகின்றன. நீங்களும் கல்வியில் உயர்ந்து சாதனை நிலைநாட்ட வேண்டும் என்பதே எமது விருப்பமாக உள்ளது என்று கூறினார்.
பாதணிகள் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேசசபை உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர்களான டெனிஸ்ராஜன், வி.சுவிஸ்கரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னேரிக்குளம் பகுதிச் செயற்பாட்டாளர் மகேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten