தமிழகத்திலிருந்து படகில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது படகு பழுதாகி தற்போது துபாயில் தங்கியிருக்கும் லோகினி ரதிமோகன் உள்ளிட்ட 19 ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்களைப் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவர்களை இன்று துபாய் அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய அரசு விரைந்து செயல்படவேண்டுமென்று வலியுறுத்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டிலிருந்து படகில் சென்றபோது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த ஈழத் தமிழர்கள் 46 பேரில் 7 பேர் ஏற்கனவே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள்.
மீதமுள்ளவர்களில் 20 பேருக்கு அமெரிக்காவும், சுவீடனும் புகலிடம் வழங்கியுள்ளன . எஞ்சியிருக்கும் 19 பேரையும் இலங்கைக்குத் திருப்பியனுப்ப துபாய் அரசு முடிவு செய்திருக்கிறது. அவர்களைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அகதிகளுக்கான ஐ.நா அமைப்பும் (யூ.என்.எச்.சி.ஆர் ) வலியுறுத்தியுள்ளன.
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 19 பேரில் லோகினி ரதிமோகன் என்ற இளம் பெண்ணும் ஒருவராவார். அவர் ஈழத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.
ஏற்கனவே அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா கொடூரமான முறையில் இலங்கைப் படையால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கும் நிலையில் லோகினியை இலங்கைக்கு அனுப்புவது தெரிந்தே அவரைக் கொலைக்களத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பாகும்.
எனவே இந்திய அரசு இதில் தலையிட்டு அந்த ஈழ அகதிகள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்குப் பிறகும்கூட இலங்கை அரசு தன்னை திருத்திக்கொள்ள எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அந்தத் தீர்மானத்தைக் கேவலப்படுத்தும் விதமாகவே நடந்துகொள்கிறது.
எல்.எல்.ஆர்.சி பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் இப்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு அதற்கொரு உதாரணமாகும். இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என அது கூறியிருக்கிறது.
இந்தச் சூழலில் ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக இலங்கைக்கு அனுப்புவது எவ்விதத்திலும் நியாயமாகாது. இதை உணர்ந்து ஈழத் தமிழ் அகதிகள் 19 பேரையும் காப்பாற்ற இந்தியா முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு- திருச்சி இடையிலான மிஹின் லங்கா விமான சேவையை நிறுத்த தீர்மானம்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 06:35.58 AM GMT ]
திருச்சி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையிலான மிஹின் லங்காவின் வாராந்த விமான சேவைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தளமாக கொண்டு இயங்கும் பொது வர்த்தக முகவர் நிறுவனமான டிரான்ஸ்லகாவின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.கே.மிட்டல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜுன் முதலாம் திகதியுடன் சேவைகள் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் திருச்சிக்கு இடையிலான சுற்றுலாப் பயணிகளின் சஞ்சாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டமையே இதற்கான காரணம் என்று எஸ்.கே.மிட்டல் குறிப்பிட்டார்.
தற்போது வாராந்தம் 4 தடவைகள் மிஹின் லங்கா விமானங்கள் கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி பயணிக்கின்றன. அண்மையில் தமிழகத்தில் இலங்கை சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக யாத்திரிகர்களும் தாக்கப்பட்டமையை அடுத்து மிஹின் லங்கா ஊடாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இதுதவிர, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு கொழும்பிலிருந்து திருச்சி, ஷார்ஜா மற்றும் பஹ்ரேன் ஊடாக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவை வாராந்தம் 18 சேவைகளை கொழும்பு மற்றும் திருச்சி நகரங்களுக்கு இடையில் மேற்கொள்கின்ற போதும், எந்தவொரு இந்திய வானூர்தி சேவையும் இரு நகரங்களுக்கு இடையிலும் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten