சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அனைத்துலக சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை இந்தியா மீறியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபுணர்கள் குழுவொன்று அறிக்கை அளித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஆராய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா கல்வி அமைச்சின் செயலர் ஆரியரத்ன ஹேவகே தலைமயிலான நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார்.
இந்தக் குழுவில் கடல்சார் விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள், புவியியலாளர்கள், கடல்சார் பொறியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு அளித்துள்ள அறிக்கையிலேயே, சேது சமுத்திரத் திட்டம் சிறிலங்காவின் கடல்சார் மற்றும் சுற்றாடல் வளங்களைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் அனைத்துலக கடல் சட்டம், கப்பல்களால் மாசடைவதைத் தடுப்பதற்கான அனைத்துலக பிரகடனமான, மார்போல் பிரகடனம் போன்ற அனைத்துலக சட்டங்கள், நெறிமுறைகளை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான அனைத்துலக கடல் எல்லைக்கு நெருக்கமாக 167 கி.மீ நீளமான இந்த சேதுக் கால்வாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தினால் சிறிலங்காவில் ஏற்படக் கூடிய சூழலியல் மற்றும் கடல்சார் தாக்கங்களை இந்தியா கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
“ஐ.நாவினால் 1968ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக கடல் சட்டத்தின்படி, சேது சமுத்திரத் திட்டத்தை தொடங்க முன்னர் சிறிலங்காவின் இணக்கப்பாட்டை இந்தியா பெற்றிருக்க வேண்டும்.
சேதுக்கால்வாய் திட்டம் இந்திய – சிறிலங்கா கடல் எல்லைக்கு மிக நெருக்கமாக உள்ளது.
அனைத்துலக கடல் எல்லைக்கு அருகே எந்தவொரு நாடும் எத்தகைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானாலும், இரு நாடுகளினதும் இணக்கம் பெறப்பட வேண்டும்.
இந்த நீண்டகால நடைமுறையை இந்தியா மீறியுள்ளது. சிறிலங்கா நிச்சயம் இந்தப் பிரச்சனையை கிளப்பும்” என்று சிறிலங்கா அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தியாவின் பயோனியர் நாளேட்டுக்குத் தகவல் வெளியிட்டுள்ளன.
“எந்த நேரத்திலும், சிறிலங்கா அரசிடம் இருந்து கடுமையான அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கலாம்.” என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten