தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 april 2013

அவுஸ்திரேலியாவிற்குச் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகளுக்கு விளக்கமறியல்!


அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகளை 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாகை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தோகைமலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜா, குடியாத்தம், காஞ்சீபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கடையநல்லூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களை சேர்ந்த 21 பெண்கள், 20 குழந்தைகள் உள்பட 120 பேர் கடந்த 5ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்தில் இருந்து விசைப்படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.
பின்னர் அந்த படகில் அவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் படகு திடீரென பழுதாகி நின்றது. இதனால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 120 பேரையும், இந்திய கடற்படையினர் மீட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் அவர்கள் நாகை கடலோர காவல் படை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நாகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வெளிநாட்டிற்கு செல்ல தேவையான பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. அதனால் பிடிக்கப்பட்ட 120 பேரில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் தவிர மற்ற 75 பேர் மீது நாகை கடலோர காவல் படை பொலிஸ் பாஸ்போர்ட் சட்டப்பிரிவு, அயல்நாட்டவர் சட்டப்பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அகதிகளிடம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி விசைப்படகில் ஏற்றிச்சென்ற ஏஜெண்டுகள் உட்பட 6 அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் இந்திய கடலோர காவல் படை பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 75 பேரையும் நாகை கடலோர காவல் படை பொலிஸார், நாகை ஜுடீசியல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை எதிர்வரும் 10ம்திகதி வரை காவலில் வைக்கும்படி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten