தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 april 2013

புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் இந்தியாவில் மனைவி பிள்ளைகள் சுவீடனில்



April 07, 20134:39 pm

விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் பிபிசிக்கு தகவல் தந்துள்ளார்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார்.
துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர்) பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர்.
தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சிங்கப்பூர் கடற்படையால் காப்பாற்றப்பட்டு துபாயில் தற்போது யு என் எச் சி ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் அமைப்பு சனியன்று கோரியிருந்த நிலையில் லோகினி ரதிமோகன் தமிழோசையிடம் பேசினார்.
விடுதலைப் புலிகள் நடத்திவந்த தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தான் பணியாற்றி வந்தவரென்றும், யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் தான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனது கணவர் இந்தியாவில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

லோகினி ரதிமோகன்
இந்தியாவில் பிழைக்க வழியில்லை என்பதாலும், எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடலாம் என்பதாலும் அங்கிருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா செல்லும் வழியில் படகு பழுதடைந்த வேளையில் ஐநா அகதிகள் உதவி அமைப்பை தொடர்புகொண்டபோது, சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு துபாய் வந்து சேர்ந்ததாக அவர் கூறினார்.
தான் வந்த படகில் இருந்த 46 பேரில் 39 பேரை அகதிகளாக யு என் எச் சி ஆர் அங்கீகரித்தது என்றும், ஏனையோர் 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் லோகினி சொன்னார்.
அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களில் பாதியளவானோருக்கு அமெரிக்கவும் சுவீடனும் அடைக்கலம் அளித்துள்ளது ஆனால் எஞ்சியுள்ள 19 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு தான் திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தான் அஞ்சுவதாக லோகினி கூறினார்.
இலங்கையில் வாழும் தமது குடும்பத்தாரும் தன்னை வர வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளுடைய தொலைக்காட்சியில் செய்தி வாசித்த இசைப்பிரியா கொல்லப்பட்டதை தான் அறிந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

Geen opmerkingen:

Een reactie posten