வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்திருப்பதாக தமிழ்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே முறையிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி நேற்று வெள்ளிக்கிழமை மாலை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதில் அமைச்சர்களான டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, ரிஷாட் பதியுதீன், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டின் தற்போதுள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சின் போது விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கும் பொதுபல சேனாவின் அடாவடித்தனமான செயற்பாடுகளால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலில் ஈடுபடும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியதுடன் முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஆத்திரத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதை ஏற்கமுடியாதென அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தெரிவித்ததுடன் மக்களை ஆத்திரமூட்டும் மிகத் தவறான வேலையை பாதுகாப்பமைச்சு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கில் சாதாரண ஒரு விடயத்துக்கும் பள்ளிவாசல் சபைத் தலைவர்களும், உலமாக்களும் இராணுவ முகாம்களுக்கு அழைத்து விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொலிஸார் மட்டுமே மக்களின் தொடர்பாடல் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டுமேயொழிய இராணுவம் அல்லவெனவும் தெரிவித்தார்.
கிழக்கில் வேறு வேலைகள் இல்லாமல் விவசாயிகளின் காணிகளில் விவசாயத்தில் ஈடுபடும் வேலைகளிலும் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கும் இராணுவம், சிவில் நிர்வாகத்தில் தலையிடுவது முஸ்லிம் மக்களை கடுமையாக ஆத்திரப்படுத்தியுள்ளதாகவும், ஏதாவது ஒரு பிரச்சினையை பேசவேண்டுமானால் பொலிஸார் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசலாமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இதர முஸ்லிம் அமைச்சர்மாரும் அமைச்சர் ஹக்கீமின் இந்தக் குற்றச்சாட்டை ஆதரித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நன்கு செவிமடுத்த ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தை பாதுகாப்பு செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten