தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

யாரை யார் ஏமாற்றுவது?புலிகளின் தலைமையின் கையெழுத்துடன் வெளியான புத்தகத்தால் ஆச்சரியம்???

மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியைத் தாங்கியதாக குமார் பொன்னம்பலத்தின் நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்களக் காடையர்களால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்திலுள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இங்கு அவரின் நினைவுகளைத் தாங்கிய நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலர், குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து தமிழீழ தேசியத் தலைவர் அப்போது வெளியிட்ட அறிக்கையை முதன்மையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அந்த இரங்கல் செய்தியில் தலைவர் தெரிவித்துள்ளதாவது, தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து அந்த உன்னத இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதனை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்துவந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார். குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.

குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரனமான அரசியல்வாதி. நேர்மையுடன் நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பி வந்தவர். சிங்களத்தின் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து வந்தவர். ஆபத்துக்கள் சூழ்ந்திருந்த போதிலும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர்.
பொன்னம்பலம் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றுள்ளவர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம் கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமை பெற்று சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். தமிழர் ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும் எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்து வந்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்துவந்தார். நேர்மைத்தன்மையுடன் அபாரமான துணிச்சலுடன் அன்னார் ஆற்றிய அரும்பணி மிகவும் பாராhட்டத்தக்கது என்று தமிழீழ தேசியத் தலைவரின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நினைவு மலரில், அமரர் குமார் பொன்னம்பலத்தின் மறைவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், மற்றும் தென்னிலங்கை தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள், வன்னி அமைப்புகள், புலம்பெயர் அமைப்புகள் போன்றன வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகள் இடம்பெற்றுள்ள போதிலும் தமிழீழ தேசியத் தலைவரின் இரங்கல் செய்தியை முன்பக்க செய்தியாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளமை இந்த மலருக்கு சிறப்பைச் சேர்த்துள்ளது.


21 Aug 2013
http://lankaroad.com/index.php?subaction=showfull&id=1377123902&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten