அன்று மாலை தனது 4 நண்பர்களுடன் திருகோணமலைக் கடற்கரை ஒன்றில், அரட்டை அடித்துகொண்டு இருந்த இளைஞன் தான் ரகீகர் மனோகரன். இவர் மருத்துவர் மனோகரனது மகன். திடீரென அங்கே ஒரு குண்டு வெடிப்புச் சத்தம் கேட்கிறது. அது அப்பகுதியையே உலுக்கி எடுக்கும் சம்பவம். இச் சத்தத்தை கேட்டு சிறிது நேரத்தில் மருத்துவர் மனோகரனின் 2 மகன் மார்களும் வீடு திரும்பிவிட்டனர். ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று மட்டும் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. ஆனால் அவரது 3 வது மகனைக் காணவில்லை. குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டு சில நிமிடங்களில் தனது தந்தையின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த ரகீகர், "அப்பா எங்களை ஆமி சுற்றிவளைத்து இருக்கிறது" என்று பதட்டமாக கூறியுள்ளான். பின்னர் சிறிது நிமிடம் கழித்து குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளான். ரகீகர் கடற்கரையில் தனது நண்பர்களுடன் இருந்ததை அவர் தந்தை அறிந்திருந்தார்.
அவர் உடனடியாக அக் கடற்கரைக்குச் சென்றுள்ளார். இருப்பினும் அங்கே பெருமளவான கடற்படையின் குவிக்கப்பட்டு, அப்பிரதேசத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்று கூறப்பட்டது. எனது மகன் இங்கே தான் இருக்கிறான் நான் பார்க்கவேண்டும் என்று அவர் மன்றாடியுள்ளார். இதேவேளை அவ்விடத்திற்கு அருகாமையில் உள்ள காந்த சிலை ஒன்றுக்குப் பின்னால், சிலரை இலங்கை கடற்படையினர் தடுத்துவைத்திருப்பதாக அவர் அறிந்து அங்கே ஓடிச் சென்றுள்ளார். அங்கேயும் அவரை கடற்படையினர் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த காந்தி சிலைக்குப் பின்னால் இருந்து பல இளைஞர்களின் அழு குரல் கேட்டுள்ளது. அவர்கள் தமிழில் எங்களை விட்டுவிடுங்கள், என்று மன்றாடிய சத்தம் அவர் காதுகளில் கேட்டுள்ளது. சில மணி நேரம் கழித்து பாரிய துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதை மருத்துவர் மனோகரன் நேரடியாகக் அவதானித்துள்ளார்.
மறு நாள் பொலிசார் அவரை அழைத்துச் சென்று ஒரு உடலை அடையாளம் காட்டுமாறு கூறியுள்ளார்கள். சவச்சாலையில் உள்ள முதலாவது கதவை திறந்து அந்த உடலைப் பார்த்தால், அது அவரது மகனின் உடல். ஆம் சுமார் 5 துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டு ரகீகர் இறந்துள்ளான். அருகில் அவனது நண்பர்களும் பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அங்கே வந்த பொலிஸ் உயர் அதிகாரி இருவர், ஒரு பத்திரத்தை நீட்டி அதில் மருத்துவர் மனோகரனை கையொப்பமிடுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். அதாவது ரகீகர் ஒரு புலிகள் உறுப்பினர் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அதில் கையொப்பமிட்டால் எதுவித பிரச்சனையும் இல்லாது உடலை தருவதாக பொலிஸ் அதிகாரி மிரட்டியுள்ளார். எனது மகன் புலிகள் உறுப்பினர் அல்ல, அவன் ஒரு டெனிஸ் வீரன், திருகோணமலையில் உள்ள எத்தனை பொலிசாருக்கும் , மற்றும் மாணவர்களுக்கும் அவன் டெனிஸ் பழக்கியுள்ளான் தெரியுமா ? என்று மருத்துவர் மனோகரன் கேட்டுள்ளார். இதனையடுத்து நடந்த வாக்கு வாதத்தில், அவர் கையப்பமிட மறுக்கிறார்.
சுமார் 10,000 கையெழுத்துக்கள் இதற்கு தேவைப்படுகிறது. இக் கையெழுத்துகள் கிடைக்கும் பட்சத்தில் இக்கொலையை விசாரிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை மகிந்தருக்கு கோரிக்கை விடுக்கும். எனவே வாசகர்களே கீழ் உள்ள லிங்கை அழுத்தி உங்கள் கையொப்பங்களை இடத் தவறவேண்டாம். இதனை பேஃஸ் புக், ரிவீட்டர் போன்ற சமூக வலையத்தளத்தில் இணைத்து, கையொப்பங்களை நிரப்ப உதவுங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten