தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

கேரளாவில் இருந்து மட்டக்களப்புக்கு போதைவஸ்து கடத்தப்படுகின்றது!- பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 11:22.38 AM GMT ]
கேரளாவிலிருந்து தலைமன்னார் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல இடங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது என கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்களை நேற்று ேசந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பொதுமக்களுக்காகவே பொலிசார் உள்ளனர் மாறாக பொலிசாருக்காக பொதுமக்கள் இல்லை.
பொலிசார் மக்களுக்கு உதவி செய்யும் போது பொதுமக்களும் பொலிசாருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பது மட்டக்களப்புக்கு ஒரு சட்டமும், கொழும்புக்கு ஒரு சட்டமும், கண்டிக்கு ஒரு சட்டமுமல்ல. இந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே சட்டமாகும்.
பொலிசார் பாகுபாடு பார்த்து தமது கடமைகளை செய்வதில்லை சாதி மத இன மொழி வேறு பாடின்றி அனைவருக்கும் அனைத்து பிரதேசங்களுக்கும் சேவையாற்றுகின்றனர்.
நாம் அனைவரும் இலங்கையர்கள் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை அனைவரும் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் போதை வஸ்த்து பாவனையை இல்லாமல் செய்ய அனைவரும் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொலை, மற்றும் கொள்ளை போதைவஸ்து பாவனை போன்றவைகளை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிசாருக்கு அவசியமாகும். இதற்காக பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும்.
கேரளாவிலிருந்து தலைமன்னார் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல இடங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு விற்பணை செய்யும் பெரிய புள்ளிகள் கைது செய்யப்படுவதில்லை. இதில் சிறிய கஞ்சா கட்டுக்களை வைத்திருப்பவர்கள்தான் பிடிபடுகின்றனர்.
இவ்வாறு கஞ்சாவை மொத்தமாக விற்பணை செய்கின்றவர்கள் அதை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கடத்துகின்றவர்களை கைது செய்ய வேண்டும்.
இதற்காக பொதுமக்கள் சமூக பிரமுகர்கள் அனைவரும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்க வேண்டும்.
பொலிசார் பொதுமக்களுக்காக மனிதாபிமானத்துடன் செயலாற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது பொதுமக்களுடன் பொலிசார் முறையாக நடந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிசாரினால் கெடுபிடிகள் இருக்குமாயின் எனக்கு நீங்கள் அறியத்தரவேண்டும். நான் உடனடியாகவே நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அன்மைக்காலமாக போக்குவரத்து பொலிசாரினால் ஏற்பட்டுள்ள கெடுபிடிகள் மற்றும் கடந்த நோன்புப் பெருநாள் காலத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் நடந்து கொண்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை, கெடுபிடிகள் என்பன போன்ற விடயங்களை காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சுட்டிக்காட்டினார்.
அதே போன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இங்கு பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறினார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவின் சில்வா, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி ரணவக்க, பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்றங்களின் முஸ்லிம் பிரதிநிதிகள், மட்டக்களப்பு சிவில சமூக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten