இதயமில்லா சந்திரன் பற்றி அவரே எழுதியதோ!பல அரசியல் கட்டுரைகளை எழுதிவரும் ஆய்வாளர் இதயச்சந்திரம் இம்முறை வித்தியாசமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எமது தமிழ் சமூகத்தில் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், உடனே துரோகிப் பட்டம் கட்டுவதும், அவரை அழிக்கவேண்டும் என்றும் மின்னஞ்சல் மற்றும் இணையத்தள யுத்தத்தை சிலர் ஆரம்பித்துவிடுவார்கள். இதில் பலர் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளார்கள். பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சமூகத்தில் பலராலும் உற்றுநோக்கப்படும் ஒரு மனிதரை எவ்வாறு அவர் எதிரி மானபங்கப்படுத்துவான் என ஆய்வாளர் இதயச்சந்திரன் மிகச் சுருக்கமாக மற்றும் தெளிவாக எழுதியுள்ளார்.
இதயச்சந்திரன்:-
இப்போது அன்றாட வாழ்வுச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பொதுமையான ஒருசில விடயங்களைப் பார்ப்போம்.
சராசரி வாழ்க்கை வாழும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட சீவியத்தில் ஒட்டுறவு இல்லாத மேல்தட்டு மக்களுக்கு இனிச் சொல்லப்போகும் உறவுகள் புரியாது. ஏட்டில் படித்து, கற்பனையில் காட்சி அமைத்து, 'புரிந்து கொண்டேன்' என்று சுயதிருப்தி கொள்பவர்கள், இதையெல்லாம் ஏற்கனவே "பிராய்டு", "இம்மானுவல் கான்ட்", "பேட்ரன்ட் ரஸ்ஸல்", போன்றவர்கள் அழகாக விளக்கி விட்டார்கள், இது ஒன்றும் புதிதல்ல என்பார்கள்.
அண்மைக்காலமாக, 'அழிக்கப்பட வேண்டியவர்கள்' என்ற சொல்லாடல் , பலவீனமான தொனியில், ஆங்காங்கே இணையங்களில் தென்படுவதை கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். இருப்பினும் எதையும் அழிக்க முடியாது என்பது விஞ்ஞானம். அழிக்கப்படும்போது (?),அதன் அளவும், பண்பும், வடிவமும் கூட மாறும். ஆனால் அது அழியாது. இன்னொன்றாக மாறுமே தவிர அதனை எதனாலும் அழிக்க முடியாது. ஆகவே இந்த ' அழித்தல்' என்கிற வார்த்தையின் அர்த்தம் என்ன ?. ஒன்றை அடியோடு இல்லாதொழிக்க முடியுமா ?. அழிக்கப்படும் பொருளோ, உயிரோ அல்லது சக்தியோ இருந்த வெளியை எது நிரப்பும் ? ....இப்படிப் பல அறிவியல் சார்ந்த கேள்விகளை எழுப்ப முடியும்.
இந்த அழிப்பு வேலைக்கான அவரசர தேவை என்ன ?.
இனம் அழிந்துவிடும், ஆகவே, இது தேவை.
இதுதான், புதிய அவதாரமெடுத்துள்ள இன இரட்சகர்களின் வியாக்கியானம்.
களை பிடுங்குவதாக நாடகம் போட்டு, கதிர்களை வேரோடு பிடுங்கும் வேலை நடக்கிறது. தன்னைவிட, சுற்றி இருப்போர் எல்லோரும் அயோக்கியர்கள் என்கிற புராணத்தை முதலில் ஆரம்பிப்பார்கள். இது ஒருவகையில் மனப்பிறழ்வு தான். தனது உளவியல் குறைபாட்டை மற்றவர் புரிந்து கொள்ள முயற்சிக்கக்கூடாது என்பதற்காக, 'இனம் அழியப்போகிறது' என்கிற ,2000 இல் உலகம் அழியப்போகிறது என்பது போலானதொரு வெருட்டலை அவிழ்த்து விடுவார்கள். அடுத்தது 'அயோக்கியர்' என்கிற சொல்லின் அர்த்தம் என்ன ?. யோக்கியம் என்பதற்கு முன்னால் ஒரு 'அ' வை போட்டால் அர்த்தமே மாறி விடுகிறது. 'சிங்கத்திற்கு முன்னால் 'அ' போட்டால் அது அசிங்கமாகி விடுகிறது. இந்த அர்த்தங்களின் அளவுகோலே வேறு.
ஒருவரை 'அயோக்கியர்' என்று நிறுவுவதற்கு, எல்லாவிதமான அசிங்கமான வழிகளையும் பிரயோகித்துப் பார்ப்பார்கள். இவர் 'அந்த' மாகாணத்தைச் சார்ந்தவர் என்பதால், இவரையும் நம்ப முடியாது என்று காட்ட, ஊரின் பெயரை, பெயருக்கு முன்னால் திட்டமிட்டே இணைப்பார்கள். மக்களால் அதிகம் கூர்ந்து அவதானிக்கப்படுபவர் மீதுதான், இத்தகைய ,'அயோக்கியன்' பட்டம் முதலில் சூட்டப்படும். மேலோட்டமாகப் பார்க்கையில் இதுவொரு தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடு போன்று தோற்றமளிக்கும். ஆனால் தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் பேசப்படும் மனிதர்கள் மீது இதேவிதமான 'பட்டமளிப்பு' வலைப்பின்னல் போடப்படுவதால், இதன் பின்னால் சமூக விரோதக் கும்பலொன்றின் நிகழ்ச்சி நிரல் நிற்சயம் இருக்கும் என்பதை நிராகரிக்க முடியாது. திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் இந்த உளவியல் பரப்புரையில், ஒரு மனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் ஆளுமை குறித்தும், அவர் /அதன் மீதான நம்பகத்தன்மையானது, எதனடிப்படையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கப்படும்.
குறிவைக்கப்பட்ட மனிதரின் ஆளுமையில் சிதைவினை ஏற்படுத்த வேண்டுமாயின், 'அப்படி இருக்குமா ?' என்கிற சந்தேகம் துளிர்விடக்கூடிய வகையில், ஒரு கற்பனைக்கதையை உருவாக்க வேண்டும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். இந்தச் செயன்முறைக்கு, ஜேர்மனிய ' கோயபல்ஸ்' என்பவரே மகா குருவானவர். 'பொய்யைப் பலதடவைகள் உரத்துச் சொன்னால், அது உண்மையாகிவிடும்' என்பதுதான் ஹிட்லரின் வாரிசுகள் விட்டுச் சென்ற பாசிச மொழி. இந்த உளவியல் யுத்தத்தில், மறுபக்கத்திலிருந்து எதிர்வினை வந்தால், அது அந்த சிதைவுச்சிற்பியின் முதல் வெற்றியாக கணிக்கப்படும். உளவியல் சமரினை எதிர்கொள்பவர், எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல் இருந்தால், பட்டமளிப்போரின் ( வசைவுபாடிகள்) தாக்குதல் தீவிரமாகும். அவர்களுடைய பொய்மை நாடக அரங்கு ஆட்டங்காணும் வகையில், வார்த்தைகள் வசைவுகளாக உதிரும். அங்குதான் , கோயபல்ஸ்களின் அண்டிக்கெடுக்கும் மாயமான் தோற்றம் கலையத் தொடங்குகிறது.
'தன்னைத்தவிர எல்லோருமே தவறான வழியில் செல்கிறார்கள் அல்லது கொண்டு செல்லப்படுகிறார்கள் ' என்று அழுத்திச் சொல்வதன் ஊடாக, இரண்டு விதமான இலக்குகள் அங்கு குறிவைக்கப்படுகிறது. ஒன்று, தன்னை ஒரு மீட்பராக, சாத்தான்களிடமிருந்து காக்க வந்த கடவுளராக சித்தரிக்க முற்படுவது. இரண்டாவது, தான் தவறானவர்கள் என்று சுட்டிக்காட்டும் மனிதர்கள் யாவரும், சமூகத்தை அழிக்கும் சக்திகள் என்று நிறுவ முற்படுவது. பொதுவாக எல்லாச் சமூகத்திலும், பரபரப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை விழுந்தடித்துப் பார்க்கும் சிறு கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அக்கூட்டத்தின் சிந்தனை மொழி, பொது மக்களின் கூட்டு மொழியல்ல. மக்களின் கூட்டு மனஉளவியலில் பெரிய மாறுதல்களை இவை எப்போதும் ஏற்படுத்துவதுமில்லை. ஒரு கணத்திற்குரிய செய்தியாக அவை பேசப்படுமே தவிர, அது ஒரு ஆழமான கருத்துருவத்தை மக்களின் கூட்டுமன உளவியலில் உருவாக்காது.
இதில் இன்னொருவிதமான அணுகுமுறை ஒன்று கவனிக்கப்பட வேண்டும். அதாவது தமது பரப்புரைகளை மின்னஞ்சல் ஊடாக இடைவெளியற்று தொடர்ச்சியாக அனுப்புவது என்பதாகும். ஆயிரத்தில் பத்து பார்க்கப்பட்டாலே ,அதுவே சரியான ஆரம்பம் என்று கணிக்கப்படும். மின்னஞ்சலுக்கு அப்பால், 'தமது செய்திகளைக் காவிச் செல்லும் இணையத்தளங்களை தேடுதல்' என்பது அடுத்த கட்ட நகர்வாக அமையும்.
ஏதாவது ஒன்று அகப்பட்டுக்கொள்ளும். தேவையற்ற சர்ச்சைகளில் மாட்டுப்பட்டுள்ள இணையத்தையே இவர்கள் நாடுவார்கள். தமது பரப்புரைகளுக்கு தளம் கொடுக்கும்வரைதான் அவர்களிடையே உறவு நீடிக்கும். அது முறியும்போது, அந்த இணையத்தின் மீதும் ' அழிவுக்குத் துணை போகும் சக்தி' என்கிற குற்றம் சுமத்தப்படும். இந்த நவீன யுக மீட்பர்கள் பற்றி எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி உங்கள் மனதில் எழுவது கேட்கிறது.
கடந்த நான்கு வருட காலமாக பெரும் வலிகளை ஆழ்மனதில் புதைத்து, உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் கூட்டுமனஉளவியலை, அடிபணிவு வாழ்க்கைக்கு ஏற்ற விதத்தில் மாற்றும் பாரிய முயற்சி, பல தளங்களில் முன்னெடுக்கப்படுகிறது. தருவதைப் பெற்றுக்கொள்வோம், நாம் பலமிழந்து உள்ளோம், பிறர் பலத்தில் தங்கி நிற்போம் என்று ஒரு வழுக்குப் பாதையில் பயணிக்க முற்படுவோர் ஒருவகையினர்.
கூட்டுப்பலமும், விடாமுயற்சியும் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பதில் நம்பிக்கை கொண்டோர் இன்னொரு வகையினர். இரண்டாவது வகையினருக்கு, ஆதரவுத் தளம் அமைத்துக் கொடுக்கும் ஊடகர்கள், மக்கள் நலன்விரும்பிகள் மீதுதான் இந்த தேசியச் சிதைவாளர்கள் தாக்குதல் தொடுக்கின்றார்கள். இவர்கள் மீட்பர்களா? அல்லது யாராலும் மேய்க்கப்படுபவர்களா? என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு உண்டு.
ஆதலால், நண்பர் ரவி.அருணாசலம் எழுதுவதுபோல் ' சற்று மாறுதலுக்காக', என்பதனை சிறிது மாற்றி, ' சற்று ஆறுதலுக்காக' அல்லது ' சற்று சிந்திப்பதற்காக' இதனை எழுதியுள்ளேன். சில விடயங்களை ஆழமாக எழுதினால், புரியாமால் போய்விடும். எழுதாமல் விட்டாலும், அவை தொலைந்துபோய் விடும்.
இதயச்சந்திரன்:-
Geen opmerkingen:
Een reactie posten