தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 19 augustus 2013

இலங்கை ஆயுதங்களை இந்தியா வாங்கியதா?

கைவிடப்பட்ட இலங்கைப் படகு தமிழகத்தில் கண்டுபிடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 03:40.12 AM GMT ]
17 அடி நீளமான சந்தேகத்துக்குரிய இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்று தமிழகம் நாகப்பட்டிணம் கரையில் ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்யால் இயங்கும் இந்தப்படகை மீனவர்கள் கண்டு கரையோர காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
எனினும் இது மீன்பிடிப்படகு என்பதற்கான ஆதாரங்களை காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்படடுள்ளது. இந்த படகில் இருந்து தீக்குச்சிகள் மற்றும் துடைப்பு துணிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
வேதாரணியம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை ஆயுதங்களை இந்தியா வாங்கியதா?
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 03:31.57 AM GMT ]
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி அளித்திருந்த பதில் பலருக்கும் வியப்பை அளித்திருந்தது.
காரணம் இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்த நாடுகள் என்று அவர் பட்டியிலிட்டிருந்த நாடுகளில் இலங்கையும் அடங்கியிருந்தது தான்.
ரஷ்யா, போலந்து, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, சுலோவாக்கியா, பின்லாந்து ஆகியனவே இந்தியா ஆயுத தளபாடங்களை வாங்கிய ஏனைய நாடுகள்.
அவையெல்லாம் சர்வதேச அளவில் ஆயுத தளபாட உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்ற நாடுகள் தான்.
இந்தப் பட்டியலில் எவ்வாறு இலங்கை இடம்பிடித்தது என்ற கேள்வி பலருக்கும் குடைச்சலை ஏற்படுத்தியது.
இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்ட போது இது சரியான பட்டியல் தானா என்று பலரும் இன்னொரு முறை சரிபார்த்துக் கொண்டனர்.
ஏனென்றால் இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுத தளபாடங்களை வாங்கியதா என்ற சந்தேகம் தான் அதற்குக் காரணம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், செக் குடியரசு, இந்தியா என்று பல்வேறு நாடுகளிடமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாவுக்கு ஆயுதங்களைக் கடனாக வாங்கிய நாடு தான் இலங்கை.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளில் இந்தியாவுக்கே ஆயுத தளபாடங்களை விற்கின்ற அளவுக்கு முன்னேறி விட்டதா என்று பலர் புருவத்தை உயர்த்தினர்.
இன்னும் சிலர் போருக்காக வாங்கப்பட்ட ஆயுதங்கள் காலாவதியாவதற்குள் இந்தியாவுக்கு விற்றுத் தீர்க்கப்பட்டதா என்றும் சந்தேகித்தனர்.
குறிப்பாக சீன ஊடகங்கள் மத்தியில் இந்தச் சந்தேகம் எழுந்திருந்தது.
ஏனென்றால் போரின போது இலங்கை வாங்கிய பெரும்பாலான ஆயுதங்கள் சீனாவிடம் தான் வாங்கப்பட்டவை.
சீன ஆயுதங்களை இலங்கை இந்தியாவுக்கு இரகசியமாக விற்றுவிட்டதா என்ற சந்தேகம் அவற்றுக்கு எழுந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவும், சீனாவும் அவ்வப்போது கைகுலுக்கிக் கொண்டாலும் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் நாடுகள்.
தனது ஆயுதங்களின் பாதுகாப்பு இரகசியம் இந்தியாவுக்குப் போவதை சீனா ஒருபோதும் விரும்பாது.
பொதுவாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தாம் உற்பத்தி செய்யும் ஆயுதங்களின் தொழில்நுட்பம் தமக்கு எதிரான நாடுகளின் கைகளில் போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது வழக்கம்.
அதற்காகவே ஆயுதங்களை விற்கும் போது குறிப்பிட்ட நாடுகளிடம் இருந்து தாமே இறுதிப் பயன்பாட்டாளர் என்ற உத்தரவாதச் சான்று பெற்றுக் கொள்ளப்படும்.
போரின் போது விடுதலைப் புலிகளும் சீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருந்தனர்.
எரித்ரியாவின் இறுதிப் பயன்பாட்டாளர் உறுதிச் சான்றிதழ் மூலமே சீன ஆயுதங்களை அவர்கள் வாங்கியதாக போர் முடிவுக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு இறுதிப் பயன்பாட்டாளர் என்ற உத்தரவாதம் கொடுத்தாலும் பல நாடுகள் அவற்றை தமது நட்பு நாடுகளுக்கு அல்லது குழுக்களுக்கு விற்றுவிடுவதுண்டு.
இன்னும் சில நாடுகள் கறுப்புச் சந்தைக்கு அவற்றை அனுப்பிவிடும்.
சில நாடுகளின் அரசாங்கங்களுக்குத் தெரியாமலும் ஊழல் இராணுவ அதிகாரிகள் மூலம் இத்தகைய ஆயுதங்கள் கறுப்புச் சந்தைக்கு வருவதுண்டு.
எனவே தாம் இலங்கைக்கு விற்ற ஆயுதங்கள் எதையும் இந்தியா வாங்கியதா என்று சீனா சந்தேகித்திருக்கலாம்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை வெளியானதுமே சீன செய்தி நிறுவனமான சின்குவா, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் இது குறித்து கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிடம் ஆயுதங்கள் எதையும் வாங்கவும் இல்லை, இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவும் இல்லை என்றும் உறுதியாக மறுப்புத் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் அறிக்கையை நேரடியாகப் பொய் என்று கூறாமல் அது பற்றி பிரிஐ வெளியிட்ட செய்தி பொய்யானது என்று குறிப்பிட்டார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையைத் தான் செய்தியாக வெளியிட்டிருந்தது பிரிஐ.
இந்தியாவின் பொறுப்பு மிக்க பாதுகாப்பு அமைச்சர் பொய்யான அறிக்கை ஒன்றை, அதுவும் பாதுகாப்புக் குறித்த பொய்யான தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட முடியாது. அவ்வாறு தவறானதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவரால் தப்பிக்கவும் முடியாது.
வழக்கத்தில் இலங்கைக்கான இராணுவ உதவிகள், ஒத்துழைப்புக்கள் குறித்து இந்தியா தான் வெளிப்படுத்தத் தயங்குவது வழக்கம்.
அது தமிழ்நாட்டில் இந்திய அரசுக்கு எதிரான உணர்வுகளைத் தோற்றுவிக்கும் என்ற கருத்தினால் இந்தியா அவ்வாறு நடந்து கொள்வதுண்டு.
 அதனால் தான் விடுதலைப் புலிகளுக்க எதிரான போரின் போது, இலங்கைக்கு ஆயுத உதவிகள் எதையும் செய்யவில்லை என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தது.
ஆனால் புலிகளின் கடல்சார் வலிமை பெருகிய போது சயுர, சாகர என இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இலங்கைக் கடற்படைக்கு இந்தியா வழங்கியது.
புலிகளின் வான்படை தோற்றம் பெற்ற போது அதை முறியடிப்பதற்காக இந்திரா வகையைச் சேர்ந்த இரு பரிமாண ராடார்களையும், எல் 70 ரகத்தைச் சேர்ந்த 40 மில்லி மீற்றர் விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும் வழங்கியது.
புலிகளுக்கு எதிரான போருக்காக இன்னும் பல ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்களையும் இந்தியா வழங்கிய விபரங்கள் போர் முடிவுக்கு வந்த பின்னரே வெளிச்சத்துக்கு வந்தன.
இன்னமும் வெளிச்சத்துக்கு வராத இராணுவ உதவிகளும் இருக்கலாம்.
இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கியதை இந்தியா மறைத்ததற்குக் காரணம் இருந்தது.
ஆனால் இந்தியாவுக்கு ஆயுத தளபாடங்கள் விற்றதை, இலங்கை மறைக்க வேண்டியதற்கு வலுவான காரணம் இல்லை.
அதனால் தான் இராணுவப் பேச்சாளரின் மறுப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படைக்கு இலங்கையில் சோலாஸ் மெரைன் நிறுவனம் 80 அதிவேக    இடைமறிப்புப் படகுகளை விற்பதற்கு 2011ல் உடன்பாடு செய்யப்பட்டது.
இந்தியா கடற்படையின் சாகர் பிரஹாரி பால் என்ற கரையோர காவல் பிரிவுக்கே இந்தப் படகுகள் கொள்வனவு செய்யப்பட்டன.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை முறியடிக்க, இலங்கைக் கடற்படைட பயன்படுத்திய உத்தியை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே இந்தப் படகுகளை இந்தியக் கடற்படை வாங்கியது.
2011ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதயில் இதற்கான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
61 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த உடன்பாட்டின் கீழ் மூன்று ஆண்டுகளுக்குள் அதாவது 2014ம் ஆண்டுக்குள் 80 படகுகளையும் இலங்கை விநியோகிக்க வேண்டும்.
இந்த உடன்பாட்டிற்கமைய முதல் தொகுதி படகுகள் 2012 டிசம்பரிலும், இரண்டாவது தொகுதி படகுகள் 2012 ஏப்ரலிலும் இந்தியக் கடற்படைக்கு விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும.
ஆனால் உற்பத்தி தாமதத்தினால் கடந்த ஆண்டு ஜனவரியில் தான் கொழும்பில் முதல் சோதனை தொகுதி படகுகளின் ஓடடம் நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 4 படகுகள் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டன.
இவை கடந்த மார்ச் 20ம் திகதி இந்தியக் கடற்படையின் தென்பகுதி தலைமையகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.
இந்தப் படகுகள் விற்கப்பட்டதை இராணுவப் பேச்சாளர் மறந்து போனாரா அல்லது மறைக்க விரும்பினாரா என்று தெரியவில்லை.
ஆனால் இந்தியா இதனை மறைக்க விரும்பவில்லை.
இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு ரீதியாக நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவே இருதரப்பும் கூறிக் கொள்கின்றன.
இந்தநிலையில் இந்தியக் கடற்படைக்கு படகுகளை விற்றுள்ள போதிலும், அவ்வாறு எதையும் விற்கவேயில்லை என்று இலங்கை அரசாங்கம் எதற்காக பிடிவாதமாக நிற்கிறது என்பது தான கேள்விக்குரிய விடயமாக உள்ளது.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten