தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

கூலிக்கு மாரடிக்கின்ற ஊடக இணைப்பாளர் சிவராசாவின் அறிக்கை கேலிக்கூத்தானது!- அனந்தி சசிதரன்!




தமிழ் விவகாரங்கள் மற்றும் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ஆர்.சிவராஜா வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
மாவிலாறு அணையை எழிலன்தான் மூடினார். அதுவே இறுதிப்போருக்கு வழி சமைத்தது என்பதற்காக அவரின் மனைவி அனந்தி தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் தன்னுடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்களின் சாட்சியாக இருப்பவர்கள் ஐநாவின் மனித உரிமை ஆணையாளரைச் சந்திப்பதன் மூலம் உண்மைகள் வெளிப்பட்டுவிடும். அங்கு நடைபெற்ற உரிமை மீறல்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்பதால் அதற்காக அச்சமடைந்து அரசுக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே சிவராஜா இவ்வாறு அறிக்கை விட்டிருக்கின்றார்.
இறுதிப்போரின் முடிவில் என்னைப் போன்றவர்கள் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதி மொழியை நம்பித்தான் எங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். அதேபோல எத்தனையோ பெற்றோரும் தமது பிள்ளைகளை ஒப்படைத்தார்கள். அவர்களைப் பொறுப்Nபுற்று கொண்டு சென்ற அரசாங்கம் அவர்கள் பற்றிய தகவல்களை இன்று வரையிலும் தெரிவிக்காமல் கபட நாடகமாடிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்போடு நடந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. கூலிக்கு மாரடிக்கின்ற சிவாராஜாவுக்கு இதெல்லாம் எப்படி புரியப் போகின்றது?
எழிலன் திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தாரே ஒழிய விடுதலைப்புலிகளின் யுத்தத்திற்கு அவர் பொறுப்பாக இருக்கவில்லை. மாவிலாறு சம்பவம் என்பது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஒரு அம்சம் அவ்வளவுதான்.
உண்மையில் மாவிலாறு என்பது ஒரு ஆறு அல்ல. அது ஒரு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால். அது மூடப்பட்டிருந்த காலத்தில் மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு அங்கு தண்ணீரும் இருக்கவில்லை. வற்றிய நிலையில் பெறுமானமற்று அது இருந்தது.
ஆனால் யுத்தத்தை எப்போது ஆரம்பிக்கலாம். தமிழ் மக்களை எப்படி அடக்கி ஒடுக்கி அழிக்கலாம் என காத்திருந்த ஆட்சியாளர்கள் இதைப் பெரிதுபடுத்தி ஒரு சாட்டாக வைத்து தமது நோக்கத்தை நிறைவேற்றினார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இதைக்கூட அறியாதவராக சிவராஜா சிறுபிள்ளைத் தனமாக அறிக்கை விடுவதும் விமர்சனம் செய்வதும் கேலிக் கூத்தானது.
வெலிவேரியாவில் தொழிற்சாலைக் கழிவுகளினால் நிலத்து நீர் விசமடைந்திருந்ததனால் குடிநீர் கேட்டவர்களை இராணுவத்தை அனுப்பி மூன்று பேரைக் கொன்று அப்பாவிகளை அடக்கி ஒடுக்கிய அரசாங்கத்திற்காக ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவராஜா வக்காளத்து வாங்கி அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கின்றது.
திருமலை அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த அவரது மனைவியான என்னை தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரச் சொல்வதற்கு ஜனாதிபதியின் தமிழப்பிரிவு இணைப்பாளருக்கு என்ன அருகதை உண்டு? எங்கள் மக்களும் நானும் பட்ட சொல்லொணாத் துயரங்களை இவர் கண்ணால் கூடப் பார்த்திருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் என்றால் என்ன அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒரு சிறு துளியாவது இவருக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட இவர் என்னை நீலிக்கண்ணீர் வடிப்பதாகச் சொல்வது நீலிக்கண்ணீருக்கு அர்த்தம் தெரியாத அவருடைய அறியாமையைத்தான் காட்டுகின்றது.
நானா இல்லை ஜனாதிபதியின் தமிழ்ப் பிரிவு ஊடக இணைப்பாளராகிய சிவராஜா எனக்கெதிராக அறிக்கை வெளியிட்டதன் மூலம் அரசுக்காக அவர்தான் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள். தேர்தலில் அவர்கள் தகுந்த பதிலும் தருவார்கள். அப்போது எல்லாம் புரியும்.
இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு செல்வதைத் தடுத்து நிறுத்திய அரசுடன் ஒட்டிக் கொண்டு தண்ணீர் பற்றிபேசுவது இவருக்கு வெட்கமாக இல்லையா? பாதிப்புகளுக்கு உள்ளாகி நடந்தவற்றுக்காக நியாயம் கேட்கின்ற என்போன்றோருக்கு எதிராக அறிக்கை விடுவது ஊடகத்துறையில் நீண்ட காலம் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற சிவராஜாவை ஒரு கருத்துப் பச்சோந்தியாகவே கருத வைக்கின்றது என்பதை அவர் கவனத்தில் எடுப்பது நல்லது.
கடந்த ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டபோது ஜெனிவா சென்று அரசுக்கு எதிராக சிவராஜா சர்வதேச ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தியாவிலிருந்து இயங்கும் இளைய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் ஜெனிவாவிலிருந்து கொண்டே அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதேபோல் லண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் ஜெனிவாவில் இருந்தவாறு உண்மை நிலைவரத்தை எடுத்துக் கூறினார். அப்போது இவரை அரச சார்பு சிங்கள ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருந்தன.
ஆனால் இன்று வயிற்றுப் பிழைப்புக்காக அரசுப் பக்கம் ஒட்டிக்கொண்டு என்னைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது. இவர் தனது ஜெனிவா பயணத்தை புரட்டிப் பார்க்கவேண்டும். அதன் பிறகு யார் நீலிக்கண்ணீர் வடிப்பது என்பதையும் யார் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது தெரிய வரும்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgp6.html#sthash.NH93ugAF.dpuf

Geen opmerkingen:

Een reactie posten