தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 augustus 2013

யாழ். புளியங்கூடல் மகாமாரி அம்மன் இயந்திரத் தகடு, நகை திருட்டு- பட்டப் பகலில் துணிகர கொள்ளை

வடக்கில் அழிவடைந்துவரும் கேணிகள் மற்றும் கிணறுகள்
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 07:44.07 AM GMT ]
வடக்கில் உள்ளூராட்சி சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த 1670 கேணிகள் மீள்புனரமைப்பு இன்றி அழிவடைந்து வருகின்றன.
ஆதி காலத்தில் கம்சபா என்ற கிராம சபை நிர்மாணிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு கால்நடைகளின் குடிதண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நன்நோக்குடன் உருவாக்கப்பட்ட கேணிகளே இவ்வாறு கைவிடப்பட்டு அழிவடைந்து வருகின்றன என வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த. நடனேந்திரன் கவலை தெரிவித்துள்ளார்.
வடக்கில் அழிவடைந்துவரும் கேணிகள் மற்றும் கிணறுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட வீதியோரங்களில் கேணிகள், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட குளங்கள் என்பன நூற்றாண்டு காலத்திற்கு முற்பட்டதாக பிரிக்கப்பட்ட நிலைகளில் அபிவிருத்திகள் இன்றிக் காணப்படுகின்றன.
அந்த வகையில் உள்ளூராட்சி சபைக்கு உட்பட்ட வீதியோரங்கள் மற்றும் வயல் பிரதேசங்களில் கால்நடைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காகவும் நன்னீர் நிலைகளில் குடி தண்ணீரைத் தேக்கி வைப்பதற்குமாக நிர்மாணிக்கப்பட்டவை கேணிகளாகும்.
இவ்வாறான கேணிகளை உள்ளூராட்சி சபைகள் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும்.
ஆனால் இவ்வாறான கேணிகள் எவ்விதமான அபிவிருத்தியும் இன்றி பாழடைந்துள்ளதால் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடமாகக் காணப்படுகின்றது. கால்நடைகளுக்கு உதவாத கேணிகளாகவும் இன்றைய காலத்தில் உள்ளமை வேதனையளிக்கின்றது.
எனவே வடக்கிலுள்ள 5 மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் இவ்விடயத்தில் கூடுதல் கரிசனை கொண்டு தற்போதுள்ள டெங்கு சூழலை அவதானித்து அவற்றை புத்துணர்வுடன், புது நிர்மாணத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும்.
இதற்காக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வடக்கு ஆளுநர் ஆகியோர் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்.ஆவரங்கால், கட்டைப்பிராயில் இருவருக்கு டெங்குத் தொற்று
யாழ்.ஆவரங்கால், கட்டைப்பிராய் ஆகிய இடங்களில் இரண்டு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இவர்கள் கூட்டிச் செல்லப்பட்டபோது இவர்களுக்கு டெங்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவரங்கால் சிவன் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் பெண் ஒருவரும், கட்டைப்பிராய் முத்து மாரியம்மன் ஆனந்தபுரம் வீதியில் உள்ள 10 வயதுடைய சிறுவன் ஒருவனுமே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையும், நேற்றும் ஆவரங்கால் சிவன் வீதியிலும், கட்டைப்பிராய் முத்துமாரியம்மன் வீதியிலும் வீடுகள், காணிகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் தொண்டர்களின் உதவியுடன் துப்புரவு செய்யப்பட்டன. விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.
மழை காலம் ஆரம்பமாகியுள்ளதால் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நுளம்புகள் பெருகாத வண்ணம் விழிப்புடன் இருக்குமாறு கோப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். புளியங்கூடல் மகாமாரி அம்மன் இயந்திரத் தகடு, நகை திருட்டு- பட்டப் பகலில் துணிகர கொள்ளை
[ வியாழக்கிழமை, 22 ஓகஸ்ட் 2013, 08:29.41 AM GMT ]
ஊர்காவற்றுறை புளியங் கூடல் மகாமாரியம்மன் ஆலயத்தில் இயந்திரத்தகடு உட்பட பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஆலயத்தின் முன்னால் சிறிய அம்மன் கோவிலொன்றைக் கட்டுவதற்காக முன்னர் இருந்த மதில் உடைக்கப்பட்டிருந்தது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் அவ் வழியே உட்புகுந்து மூலஸ்தானத்திலிருந்து அம்மன் விக்கிரகத்தைப் புரட்டிக் கீழிருந்த இயந்திரத் தகட்டையும், களஞ்சிய அறையை உடைத்து அங்கிருந்த சில்வர் பாத்திரங்களையும் எடுத்துள்ளனர்.
அதேபோன்று ரிக்கெட் வழங்கும் அறையை உடைத்து அங்கிருந்த நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுதுமலை - தாவடி வீதியில் பட்டப் பகலில் துணிகர கொள்ளை
பட்டப் பகலில் கைப்பையுடன் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இத் திருட்டு சுதுமலை அம்மன் கோயிலுக்கருகாமையில் சுதுமலை - தாவடி வீதியில் இடம்பெற்றுள்ளது.
சுதுமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் கைப்பையுடன் மானிப்பாயிலிருந்து வீதியால் வீடு நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது அவ் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மக்கள் நடமாட்டமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணிடமிருந்த கைப்பையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளான்.
இச் சம்பவத்தைத் தூரத்திலிருந்து அவதானித்த சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்ற போதிலும் கொள்ளையடித்த இளைஞர் அகப்படவில்லை.
இதேவேளை திருடனால் அபகரித்துச் செல்லப்பட்ட கைப்பையில் சொற்ப பணத்தைத் தவிர பெறுமதியான பொருட்கள் இருக்கவில்லையெனப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten