தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

மனுஸ்யபுத்திரன் கருத்தை கருத்தால் எதிர்க்காமல் மக்களிடம் தீர்வை விடாமல் தடுப்பது எதற்காக ???

மெட்ராஸ் கஃபே! யாருக்காக யாரால் எடுக்கப்பட்ட படம்? - மனுஸ்யபுத்திரன்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 02:24.18 PM GMT ] [ நக்கீரன் ]
சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. 
கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

1990களில் ஈழப் போர் பின்னணியையும் ராஜீவ் காந்தி படுகொலையையும் மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. எல்.டி.டி.ஈ. என்பதற்கு பதிலாக எல்.டி.எஃப், பிரபாகரனுக்கு பதிலாக பாஸ்கரன். இப்படி ஒவ்வொரு தளபதிகளுக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது. மெட்ராஸ் கஃபே என்பது ஓர் உணவு விடுதி. ராஜீவ்வை கொல்ல சதியில் ஈடுபடுபவர்கள் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒரு நாடு. அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி குரல் கதை சொல்கிறது. இந்தியாவை பாதிக்கும் ஒரு ரகசிய திட்டத்தை கண்டறிவதற்காக யாழ்ப்பாணம் செல்லும் ஒரு இந்திய அரசாங்கத்தின் உளவாளியின் கதைதான் மெட்ராஸ் கஃபே. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவும் இந்திய அமைதிப்படையை ஈழத்து மக்களை காக்க வந்தவர்களாகவும் இந்தப் படம் சித்தரிப்பதாகச் சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது போட்டி அமைப்புகளுக்குமான முரண்பாடுகள், ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம், ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்வது என பயணம் செய்யும் இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் ஈழப் பிரச்சினையை சித்தரிப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

"அப்படி ஒரு பார்வையை ஒருவர் முன்வைக்கக்கூடாதா? அந்தப் படத்தை அதற்காக தடை செய்ய வேண்டுமா? இது கருத்து சுதந்திரத்தை பறிப்பது ஆகாதா?' என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கருத்து சுதந்திரத்திற்கும் வரலாற்றை திரிப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக் கிறது. துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்கள் மீதான சர்ச்சையிலும் இதே பிரச்சினைகள்தான் எழுந்தன. நாம் கருத்துரிமை சார்ந்த விஷ யங்களையும் பொய்யான வரலாற்றுடன் ஆபத்தான நோக்கங்களுடன் எடுக்கப்படும் கலைப்படைப்புகளையும் எப்படிப் பிரித்தறிவது என்பது தான் இப்போதுள்ள முக்கியமான பிரச்சினை.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தையும் அதன் பேரழிவுகளையும் மறைத்துவிட்டு அமெரிக்க ராணுவத்தினரை மனிதாபிமானிகளாகவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மட்டுமே பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் விஸ்வரூபம் படத்திற்கு நிகரானதுதான் மெட்ராஸ் கஃபே படமும். அமெரிக்க ராணுவத்திற்கு பதில் இந்திய ராணுவம். ஆப்கானிஸ்தானிற்கு பதில் ஈழம். அல்கொய்தாவிற்கு பதில் எல்.டி.டி.ஈ. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதுபோன்ற படங்கள் இந்தியாவில் ஏன் தொடர்ச்சியாக எடுக்கப்படுகின்றன? உலகெங்கும் உள்ள மக்களுடைய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கங்களின் பார்வையில் எடுக்கப்படும் இந்தப் படங்களின் நோக்கம் என்ன? போராட்டங்களை ஒடுக்குகிற, அரசாங்கத்திற்கு சாதகமான உளவியல் பார்வையை மக்களிடம் உருவாக்குவதா? அல்லது அந்த போராட்டங்களின்மீதான ஒடுக்குமுறைகளை அரசியல்ரீதியாக நியாயப்படுத்துவதா? தொடர்ந்து பயங்கரவாதம் தொடர்பாக எடுக்கப்படும் பிரம்மாண்டமான படங்கள் மிகப்பெரிய ரகசிய நிதியுதவியுடன் செயல்படும் ஒரு பிரச்சார இயக்கத்தின் பகுதியாகவே பார்க்க முடிகிறது. யாரெல்லாம் இந்தப் பிரச்சார இயக்கத்தின் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இந்தப் பிரச்சார படங்களின் நோக்கங்கள் வெளிப்படையானவை.

ஜான் ஆப்ரஹாம் இலங்கை அதிபரை போய் சந்தித்ததாக பல செய்திகள் கூறுகின்றன. இந்த இடத்தில் ராஜபக்சேவின் பிரச்சார யுக்தியைப் பற்றி நாம் குறிப்பிட வேண்டும். ஒரு காலத்தில் பத்திரிகை, வானொலி, இணையம் என விடுதலைப்புலிகள் மிகப்பெரிய ஊடகக் கட்டமைப்பை உருவாக்கி நடத்திவந்தனர். இவற்றை முறியடிக்க ராஜ பக்சே 2000-ன் பிற்பகுதியில் பெரும் நிதிச்செலவில் ஊடகப் பிரச்சாரங்களுக்கான திட்டங்களை உருவாக்கினார். அதில் ஒன்று, இந்தியாவில் தனது அரசாங்கத்திற்கு சார்பான, ஈழப்போராட்டத்திற்கெதிரான பிரச் சார வேலைகளைச் செய்வது. இறுதிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இலங்கை தூதரகத்தின் வழியாகவும் இடைத் தரகர்கள் வழியாகவும் ஏராளமான பணம் ஊடகத்துறைக்குள் பட்டுவாடா செய்யப்பட் டது. சில பிரபலமான ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு வெகு தீவிரமாக நடத்தியதற்கு பின்புலத்தில் இந்தப் பணம் இருந்தது. இன்னொருபுறம் இந்திய உளவுத் துறையும் புலிகளுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கம் அளித்தது. தமிழகத்தில் பணம் பெற்ற சிலர் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஒன்று பத்திரிகை முதலாளிகளையே விலைக்கு வாங்குவது, அல்லது வேலை செய்யும் பத்திரிகையாளரை விலைக்கு வாங்குவது என்கிற ரீதியில் இலங்கை அரசு வெகு தீவிரமாக செயல்பட்டது.

இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்திய அரசாங்கத்தை இலங்கைக்கெதிராக செயல்பட வலியுறுத்தும் குரல்கள் தமிழகத் தில் வலிமை பெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த மாணவர் போராட்டங்கள் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முள்ளிவாய்க்கால் படுகொலையின் காயங்கள் காங்கிரஸின்மீது தீராத வெறுப்பை தமிழக மக்களிடம் ஏற் படுத்தியிருக்கிறது. இலங்கையில் நடை பெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்கிற போராட்டம் தமிழகத்தில் இப்போதே தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களினுடைய இந்த எதிர்ப்பு மனநிலையை மழுங்கடிக்கவும் பொதுவாக இந்திய மக்களிடம் காங்கிரஸ் அரசின் ராஜபக்சே ஆதரவு நிலைப்பாட்டை நியாயப் படுத்தவும் இதுபோன்ற படங்கள் எடுக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதுபோன்ற படங்கள் இந்திய அரசு, இலங்கை அரசு இரண்டுக்குமே மிகவும் உவப்பு அளிக்கக்கூடியவையே.

இதில் துயரமான ஒரு விஷயம் என்னவெனில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையோ அவர்கள் தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகளையோ இந்தியாவில் இருக்கும் ஏனைய மக்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளவோ அதன் குறைந்தபட்ச கருணையோகூட காட்டவில்லை என்பதுதான். விடுதலைப்புலிகள் என்றால் அவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்கிற ஒரே அடிப்படையில் மட்டுமே தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். 1987இல் இந்திய அமைதிப் படை ஈழமண்ணில் நடத்திய கோரத்தாண்டவங்களைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. முள்ளிவாய்க் காலில் லட்சக்கணக்கான மக்கள் எப்படி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
இலங்கை இன்று உலகிலேயே மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நாடு என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இந்திய அரசாங்கம் இலங்கையின் இனவெறி அரசாங்கத்திற்கு எத்தகைய ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. இந்த ஏனைய இந்தியாவின் குருட்டுப் பார்வையைத்தான் இந்தப் படத்தின் இயக்குநரும் ஈழப்பிரச்சினைகளின்பால் வெளிப்படுத்து கிறார். இந்திய அமைதிப் படையின் வன்முறைகளையோ, முள்ளிவாய்க்கால் படுகொலைகளோ கண்கொண்டு பார்ப்பதற்கு அவரது கலை சுதந்திரம் அவரை அனுமதிப்பதில்லை. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் ஈழத் தமிழர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதைப்பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. ராஜீவ் காந்தி கொலையில் இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களைப் பற்றி நடந்து வரும் விவாதங்களை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. இப்படித்தான் ஈழத்தமிழர்களுடைய வரலாறு இந்த உலகத்திற்குச் சொல்லப்படுகிறது. நம் முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி, நம் முன் நிகழ்ந்த ஒரு கொடூரமான மானுட அழிவைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒடுக்குமுறையாளர்களுக்கு சாதகமான ஒரே ஒரு அரசியல் கோணத்தை மட்டும் கையாளும் ஒரு படத்தை நாம் கலைப்படைப்பு என்று அழைக்க வேண்டுமா அல்லது பிரச்சார படைப்பு என்று அழைக்க வேண்டுமா?

சென்சார் போர்டு அனுமதி அளித்த ஒரு படத்தின்மீது தடை போடுவது தவறு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நமது சென்சார் போர்டின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமானதாகி எவ்வளவோ காலமாகிவிட்டது. அவை உண்மையில் அரசாங்கத்தின் கருவிகளாக இருக்கின்றனவேயொழிய அவற்றிற்கென்று சுதந்திரமான செயல்பாடுகள் எதுவும் இல்லை. ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள், தணிக்கைக்குழு மற்றும் அரசாங்கத்தின் கடும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட ஆர்.கே.செல்வமணியின் "குற்றப்பத்திரிகை' படம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ஆணிவேர்', "தேன்கூடு' போன்ற படங்கள் சென்சாரைக் கடந்து வரவே முடியவில்லை. "காற்றுக் கென்ன வேலி' படத்தை இங்கே திரையிட முடியவில்லை.

இவ்வாறு ஈழப் போராட்டம் மற்றும் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக, அரசாங்கத்திற்கு உவப்பில்லாத எந்தக் கருத்தையும் இங்கே ஒரு திரைப்படமாக்க முடியாது. இந்தப் படங்கள் அனுமதிக்கப்பட்டு மக்களிடம் காட்டப்பட்டிருந்தால் நாம் மெட்ராஸ் கஃபே படத்திற்காக கருத்துச் சுதந்திரத்தின் பொருட்டு போராடலாம். ஆனால் இங்கே கருத்து சுதந்திரம் என்பது ஒருவழிப் பாதையாக இருக்கிறது. அதிகார சக்திகளின் நலன்களை பாதுகாக்கும், அவர்களது நோக்கங்களை பிரச்சாரம் செய்யும் "துப்பாக்கி', "விஸ்வரூபம்', "மெட்ராஸ் கஃபே' போன்ற படங்களுக்கு சமூகக் குழுக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் நேரடியாக ஒடுக்குமுறையில் ஈடுபடும் �காற்றுக்கென்ன வேலி� போன்ற படங்களைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. இப்போதுகூட அரசாங்க அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்ட "தலைவா' படம் குறித்து கருத்துச் சுதந்திரம் சார்ந்த எந்த போராட் டமும் திரைத்துறையினரிடம் இருந்துகூட எழவில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மட்டும்தான் கண்ணீர் விட்டு அழுதார். இதே படத்திற்கு ஏதேனும் ஒரு சமூகக் குழுவிடம் இருந்து அழுத்தம் வந்திருந்தால் இந்நேரம் பெரும் கூக்குரல்கள் எழுந்திருக்கும்.  

ஒவ்வொன்றிற்கும் தடை கேட்பது என்பது பொதுவாக அரசாங்கத்தின் அதிகாரத்தை எல்லையற்று பெருகச் செய்வதற்கு இடமளிக்கும் என்பது உண்மைதான். இது காலப்போக்கில் ஒவ்வொரு அறிவு சார்ந்த, கலைசார்ந்த செயல்பாடுகளிலும் அரசு தலையிடுவதற்கான உரிமையை வலிமைப்படுத்தப் போவது நிச்சயம். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் விடுதலைப் புலி களை பயங்கரவாதிகள் என்று சொன்ன தமிழக முதல் வரிடமே இப்போது புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லும் படத்திற்கு தடை விதியுங்கள் என்று கேட்பது தான். இந்திய அரசாங்கம் புலிகளின்மீது விதித்திருக்கும் தடையை இன்றும் நீடித்திருக்கிறது. இந்த அமைப்புக்குள் நின்றுதான் நாம் புலிகளுக்கெதிரான ஒரு படத்தை தடை செய்யுமாறு கோருகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் பாடான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

"மெட்ராஸ் கஃபே' போன்ற படங்களுக்கு ஒரு தெளிவான அரசியல் நோக்கம் இருக்கிறது. அரசியல், அரசியலால் எதிர்க்கப்படுவது என்பது தவிர்க்க முடியாதது.

Geen opmerkingen:

Een reactie posten