தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 augustus 2013

இறுதி யுத்தத்தில் மக்களை தாங்கிய “இந்தியக் கப்பல்” வவுனியா நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்களன்று நடைபெற்ற அதேவேளை, மேலும், புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவைகள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட்டவர்கள் சார்பிலான முதல் ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்வதற்கு எதிரணித் தரப்பினருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இன்னும் இரண்டு தினங்களில் அந்த எதிர்மனு தாக்கல் செய்யப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்குகளை வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.
புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் பல புதிய விடயங்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ருப்பதாக இந்த வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.
”பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தினுள் தாங்கள் இருந்தபோது, விமானத்திலிருந்து அந்தப்பகுதி மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் எறியப்பட்டன என்றும் இந்த மனுக்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார் சட்டத்தரணி ரட்னவேல்.
‘அது மட்டுமன்றி, கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனுதாரர்கள் தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் முதன் முறையாகத் தெரிவித்திருக்கின்றார்கள்’ என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.
இந்த வழக்குகள் யாவும் வரும் செட்படம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
BBC

Geen opmerkingen:

Een reactie posten