தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 februari 2012

இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது!- அனலை நிதிஸ் ச. குமாரன்!!



இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார்.
இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் முதலாவது ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் நாடு என்கிற நற்பெயரைக் கொண்ட இந்தியா, இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறிலங்காவை சமாதானப்படுத்த முயல்வது ஏன் என்கிற கேள்வி பல கோடித் தமிழ் மக்கள் மனங்களில் எழுகிறது.
 ஏழு கோடிக்கும் அதிகமான தமிழ் மக்கள் தாம் இந்தியர்கள் என பெருமையாக கூறுபவர்கள். அவர்களை ஏன்தான் இந்தியா மாற்றான்தாய் மனதுடன் பார்க்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
தமிழர்களைக் குழப்பி அவர்களை முட்டாள்களாக்கலாம் என்கிற கருத்து இந்திய நடுவன் அரசிற்கு பல காலமாகவே இருந்து வருகிறது.
இதனை மையமாகவைத்தே இந்திய நடுவன் அரசு தமிழக விவகாரங்களிலும், உலகத்தமிழர்களின் விடயங்களிலும் செய்துவருகிறது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தமிழர்களே அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தார்கள். இதனை விரும்பாத இந்திய நடுவன் அரசும் அதனுடைய உளவுத்துறையும் இணைந்து வங்காளிகளையும் குஜராத்திகளையும் இத்தீவுகளுக்கு அழைத்துச்சென்று குடியேற்றப்பட்டு இன்று தமிழர்களின் சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது.
இவைகள் எல்லாம் நடைபெற்ற போது தமிழக அரசோ அல்லது தமிழக எ.ம்.பிக்களோ எதனையும் செய்யவில்லை. தமிழ்த் தலைவர்கள் எலும்புத்துண்டுக்கு அடிபணிபவர்கள் என்கிற கருத்து இந்திய நடுவன் அரசிற்கு இருக்கிறது போலும்.
ஆயிரம் நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழிக்கேற்ப இந்திய மத்திய அரசும் அதன் உளவாளிகளும் நிச்சயம் ஒருநாள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்று கூறுகிறார்கள் தமிழ் அரசியல் அவதானிகள்.
இந்தியாவின் அமைதியான இராஜதந்திரம் அதன் பொருளாதார அபிவிரித்திக்கு உதவியாக இருக்கலாம். அதனுடைய இராஜதந்திரம் ஒருபோதும் பிற விடயங்களில் வெற்றியளிக்கப் போவதில்லை. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புச் சம்பந்தமான விடயங்கள் மற்றும் இந்தியாவின் அண்டைய நாடுகளின் பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவைத் தவிர்ந்த பிற நாடுகளே ஆதிக்கத்தைச் செலுத்தப் போகிறார்கள் என்பதுதான் உண்மை.
முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகள்
கடந்த 16-ஆம் நாளன்று கொழும்பு வந்த எஸ்.எம். கிருஸ்ணா முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவே திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதால், அதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் சந்திப்பதை தடுக்கவே அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலின் அடிப்பைடையிலேயேதான் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்வது வழக்கம். குறிப்பாக அவருடைய நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே பயணம் செய்யும் நாட்டின் அரசிற்கு கொடுக்கப்பட வேண்டும்.
அதன் அடிப்படையிலேயேதான் நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சி நிரலை பார்த்துவிட்டே வேண்டுமென்றே கிருஷ்ணாவின் திட்டத்தை மாற்ற வேண்டுமென்கிற வகையில் செயற்பட்டது சிறிலங்கா அரசு. தமிழ் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டால் சிங்கள மக்களிடம் வெறுப்பை சிறிலங்கா அரசு சம்பாதிக்க வேண்டும் என்கிற வாதம் ஒருபுறம் இருக்க, உலக நாடுகளுக்கு சிறிலங்காவின் பலம் என்னவென்பதைக் காட்டவுமே கிருஷ்ணாவை பொங்கல் விழாவில் பங்குபற்ற வியூகத்தை வகுத்தது சிங்கள அரசு.
தமிழர்கள் அழிவுகளைச் சந்தித்த வேளையில் சிங்கள அரசிற்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வியூகங்களை வகுத்துக்கொடுத்தது இந்திய நடுவன் அரசு. ஈழத் தமிழரைக் காப்பாற்றக் கோரி பல தமிழ் இளைஞர்கள் தீயிட்டு இந்திய மண்ணில் செத்தார்கள். இவர்களின் பரிதவிப்புக்கூட இந்திய நடுவன் அரசிற்கு தெரியவில்லை. கச்சிதமாக இந்திய அரசின் உதவியுடன் தனது வேலையை செய்து முடித்தது சிங்கள அரசு. அழிவுகளுக்குக் காரணமாக இருந்துவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது இந்திய நடுவன் அரசு.
வீடு அமைத்துக் கொடுப்பதாலோ அல்லது வீதி அமைத்துக் கொடுப்பதாலோ தமிழர்களின் துன்பங்கள் தீரப்போவதில்லை என்பதை இந்தியா முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகத்தை ஏமாற்றும் நோக்கில் சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இந்தப் போலியான நாடகத்துக்கு இந்தியா பக்கபலமாக இருந்து வருகிறது.
நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் சிங்கள அரசு, தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன்? இராணுவத்தை வாபஸ் பெறாதது ஏன்? தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்காதது ஏன்? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டுமே. இன ஒழிப்பே சிறிலங்காவின் நடவடிக்கையாக உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ.
முன்னுக்கு பின் முரணான வேலைகளையே இந்தியா செய்துவருகிறது என்பதையே கடந்த மற்றும் நிகழ்கால நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. தமிழர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமை கூட பல தடவைகள் இந்தியாவின் நேசம் வேண்டும் என்கிற வகையிலேயேதான் பேசி வந்துள்ளர்கள்.
 தமிழீழம் தமது தாய் வீடென்றும் இந்தியா தமது தந்தையர் நாடென்றுமே கூறிவந்துள்ளார்கள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள். இதனைப் புரிந்துகொள்ள மனமில்லாத இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தமிழர்களுக்கும் அவர்தம் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பதே வரலாறு.
இந்தியாவை அசட்டை செய்யும் மகிந்தா
பல தசாப்தங்களாக ஈழத்தமிழர் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாத்தை தட்டிகேட்க வக்கில்லாத இந்திய அரசு சிங்கள அரச தலைவர்களை துதிபாடுவது ஏனென்று தெரியாமல் உள்ளது. 2006-ஆம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறார்கள் விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்டிக்காத இந்திய அரசு, பாராளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய வேலை செய்கிறது என்று சாடியுள்ளார் வைகோ.
தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும் சிங்களவர்களுக்கு அடங்கித்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்ட சிறிலங்கா, எஸ்.எம். கிருஷ்ணா இப்போது பேசிவிட்டதாகவும் 13-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது தமிழக மக்களையும் உலகத் தமிழர்களையும் ஏமற்றும் தந்திரோபாயமே. 13-பிளஸ் திருத்தச்சட்டத்தை மகிந்தா ஏற்றுக்கொண்டதாக கிருஷ்ணா கூறினார்.
இவருடைய கூற்றை மறுத்துள்ளார் மகிந்தா. இதிலிருந்து இரண்டு நாடுகளில் ஓன்று பொய்யைக் கூறுகிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு படிமேல் சென்று கூறவேண்டுமாயின் கிருஷ்ணாதான் பொய் சொல்லுகிறார் என்றுதான் கூற வேண்டியுள்ளது. தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வுத்திட்டம் சிங்கள அரசுகளிடம் இதுவரை காலமும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதில்லை என்பதை சிறுபிள்ளையும் ஏற்றுக்கொள்ளும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் காவல்துறைக்கு வழங்கும் அதிகாரத்தை கொடுக்க முடியாது எனத் திட்டவட்டமாக கிருஸ்ணாவிடம் தெரிவித்துவிட்டதாக மகிந்தா கூறியுள்ளார். அப்படியானால் 13-பிளஸ் திருத்தச்சட்டம் என்பதன் பொருள் என்னவென்பதை பத்திரிகையாளர்கள்தான் கிருஷ்ணாவிடம் கேட்டு அறிய வேண்டும். அடிப்படை அதிகாரங்களே குறித்த திருத்தச்சட்டத்தில் இல்லையென்றால் எப்படி மகிந்தாவினால் 13-ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலாகவும் சென்று தமிழர்களுக்கு நீதியை வழங்குவார் என்கிற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் நாளும் பொழுதும் சிங்களக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு நீதியை பெற்றுத்தர துப்பில்லாத இந்திய நடுவன் அரசு இந்திய மீனவர்களைக் கொல்லும் கொலைகாரர்கள் அளிக்கும் விருந்துபசாரங்களில் கலந்து கொள்வது இந்தியாவிற்கே அவப்பெயரை தேடித்தரும் செயல்.
தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்கப்படும் போது இந்திய மத்திய அரசாங்கம் அதில் தலையிடாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இது தொடர்பில் அறிக்கை ஒன்றில் சமீபத்தில் தெரிவித்தார்.
“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, சிறிலங்காவிற்கு சென்று மீனவர்களின் பிரச்சினை குறித்து பேச்சு நடத்திய மறுநாளே சிறிலங்காவின் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, சிறிலங்கா வழங்கியதாக கூறப்படும் உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதையே இது உணர்த்துகிறது. இதனை தொடர்ந்தும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்" என்று கருணாநிதி எச்சரித்துள்ளதுடன், “இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் விரைந்து செயற்படவேண்டும். சிறிலங்காவின் கடற்படையினரின் இந்த தாக்குதல்கள் தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளதாக" கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.
வேடிக்கை என்னவெனில் தி.மு.காவும் இந்திய ஆளும் கூட்டணியில் பங்கு வகிக்கிறது. கருணாநிதி நினைத்தால் இந்திய மத்திய அரசை உடனேயே இது விவகாரத்தில் தலையிட்டு சில தினங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை எடுக்க முடியும். வெறும் அரசியல் காரணங்களுக்காகவேதான் கருணாநிதியின் இவ்வாறான அறிக்கைகள் அமைந்துள்ளன என்று கூறுகிறார்கள் தமிழக அரசியல் விமசகர்கள்.
இந்தியாவின் இராஜதந்திரம் குறிப்பாக சிறிலங்கா விடயத்தில் படுதொல்வியிலேயேதான் இருக்கிறது. சில அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு தப்பான முடிவுகளை எடுப்பதன் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கே சவாலாகிவிடும். ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு அண்மையில் தளம் அமைத்து இயங்குகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் இந்திய இறையாண்மைக்கே பாதிப்பாக அமைந்துவிடும்.
சிறிலங்கா என்கிற நாடு பௌத்த-சிங்கள கொள்கையை மையமாகக் கொண்டே இயங்குகிறது. சீனாவுடன் தோழமை கொள்வதன் மூலமாக பலதரப்பட்ட அனுகூலங்களை சிறிலங்கா பெறும். மத ரீதியாக மற்றும் அரசியல் கொள்கைகளின் அடிப்படைகளில் இரு நாடுகளும் ஒற்றுமையானவை.
இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள் மிக முக்கியமானவர்கள். ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. இதனை இந்தியா உணர்ந்து சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அறிந்து தெளிவான இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதே இந்தியாவிற்கு உடனடித் தேவையாக உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten