“இஸ்ரேலிய விமானப்படை நடத்திய குண்டுவீச்சு, சிரியா சேகரித்து வைத்திருந்த ரஷ்ய ஏவுகணைகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ள நியூயார்க் டைம்ஸ், “ஆனால், இஸ்ரேலிய விமானங்கள் வீசிய குண்டுகள், சிரியாவிடம் இருந்த ரஷ்ய ஏவுகணைகளை முழுமையாக அழிக்க முடியவில்லை என்பதனையும் தெரிவித்துள்ளது. இந்த விமான தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், அங்கிருந்த ஏவுகணைகளில் ஒரு பகுதி வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன” என்று கூறியுள்ளது நியூயார்க் டைம்ஸ்.
அமெரிக்க உளவுத்துறையின் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் இது என்கிறது, நியூயார்க் டைம்ஸ்.
இந்த விமானத் தாக்குதல் நடந்து சுமார் 4 வார காலம், தாக்குதலை யார் செய்தது என்பதில் ‘கனத்த மௌனம்’ நிலவிய நிலையில், நேற்றுதான், அந்த தாக்குதல் இஸ்ரேலின் கைங்கார்யம் என்று வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. (விமானத் தாக்குதலை செய்தது தாம் என்பதை இஸ்ரேல் இன்னமும் மறுத்து வருகிறது என்பது வேறு விஷயம்.) இவர்கள் குறிப்பிடும் விமானத் தாக்குதல், கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்தது. சிரியாவின் துறைமுக நகரம் லதாகியா அருகேயுள்ள ஆடையாளம் குறிப்பிடப்படாத வேர்ஹவுஸ் ஒன்றின்மீது நடத்தப்பட்டது. திடீரென சிரியாவின் வான் பகுதிக்குள் வந்த போர் விமானங்கள் மூன்று, இந்த வேர்ஹவுஸ் மீது குண்டுமழை பொழிந்தன.
இவற்றை தாக்குவதற்காக, சிரியா விமானப்படை ஸ்தலத்துக்கு வருவதற்கு முன், மூன்று விமானங்களும் தப்பிச் சென்றுவிட்டன. வந்த 3 போர் விமானங்களிலும் எந்தவொரு மார்க்கிங்கும் கிடையாது. அதாவது அவை எந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமானவை என்று அடையாளம் காட்டும், பெயரோ, இலக்கமோ விமானங்களில் வெளிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே இது இஸ்ரேலின் வேலைதான் என்பதாக ஒரு ஊகம் இருந்துவந்தது. ஆனால், இஸ்ரேலிய விமானப்படைதான் என்று அடித்துச் சொல்லுவார் யாருமில்லை. இப்போது, அமெரிக்க உளவுத்துறையை ஆதாரம் காட்டி, அது இஸ்ரேலின் விமானங்கள்தான் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியிருக்கிறது.
கைவசம் ஆதாரமில்லாமல் செய்தி வெளியிடும் பத்திரிகையல்ல நியூயார்க் டைம்ஸ். இந்த தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான கார்கோ விமானம் ஒன்று, சிரியாவில் சில பொருட்களை இறக்கியது. விமானத்தின் கார்கோ ஹோல்டில் இருந்து கன்டெயினர்கள் இறக்கப்படுவதை அமெரிக்க உளவு சாட்டலைட் படம் பிடித்திருந்தது.
ஆனால், கன்டெயினர்களுக்கு உள்ளே என்ன பொருள் உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையால் உறுதி செய்ய முடியவில்லை. ரஷ்யத் தரப்பு, அவற்றில் நிவாரணப் பொருட்கள் உள்ளதாக கூறியது. சிரியாவிடம் யாரும் கேட்கவில்லை. மறுநாள் உளவு வட்டாரங்களில் பரவலாக அடிபட்ட கதையின்படி, இந்த கன்டெயினர்களுக்குள் இருந்தவை நிவாரணப் பொருட்கள் அல்ல, ஏவுகணைகள். சரியாக சொல்ல வேண்டுமென்றால், ரஷ்யத் தயாரிப்பு யாக்ஹோன்ட் ரக ஏவுகணைகள்.
இந்த ஏவுகணைகள், சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டு யுத்தத்துக்கு தேவையற்றவை. காரணம், இவை தரையில் இருந்து கடலுக்கு ஏவப்படும் (கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த உபயோகிக்கப்படும்) ஏவுகணைகள். சிரியாவில் தற்போது நடப்பது. தரை யுத்தம். போராளிப் படையினரிடம் கப்பல்கள் கிடையாது. இதனால், இந்த ஏவுகணைகளை சிரியா பெற்றுக்கொள்வது, சிரியாவுக்கு வெளியே கடலில், வேறு நாட்டு கடற்படை கப்பல்களை தாக்குவதற்கு என்று ஊகிக்கப்பட்டது. இன்றைய தேதியில் சிரியா கடலில் இலக்கு வைப்பதென்றால், அது இஸ்ரேலிய கப்பல்களாக இருக்கும், அல்லது அமெரிக்க கப்பல்களாக இருக்கும். அமெரிக்க கப்பல்கள்மீது தாக்கதல் நடத்துவதென்றால், ஒரு தடவைக்கு பல தடவைகள் யோசிக்க வேண்டும் என்பதால், சிரியா இறக்கிய ஏவுகணைகளின் பிரதான இலக்கு தமது கப்பல்கள்தான் என இஸ்ரேல் ஊகித்து விட்டிருக்கும்.
சிரியாவில் இறக்கப்பட்ட கன்டெயினர்கள் அங்கிருந்து எங்கே கொண்டு செல்லப்படுகின்றன என்பதில் இஸ்ரேலிய உளவுத்துறை கண் வைத்திருந்திருக்கும். அந்த கன்டெயினர்கள், லதாகியா நகரத்துக்கு அருகேயுள்ள வேர்ஹவுஸ் ஒன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டன என்பதை இஸ்ரேலிய உளவுத்துறை தெரிந்து கொண்டது என்கிறார்கள்.இதையடுத்தே ‘மர்ம விமானங்கள்’ குண்டுகளுடன் வந்து சேர்ந்தன. கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்த விமானக் குண்டுவீச்சில், வேர்ஹவுஸ் முழுமையாக அழிக்கப்பட்டது. அதற்குள் இருந்தவை எல்லாம் சாம்பலாகின. ஆனால், இந்த இடைப்பட்ட 2 நாட்களில், வேர்ஹவுஸூக்குள் னொண்டு செல்லப்பட்ட கன்டெயினர்களுக்குள் இருந்த ஏவுகணைகளில் ஒரு பகுதி, வேறு ஏதோ ரூபத்தில் வெளியே கொண்டுசெல்லப்பட்டு விட்டன என்பதே, அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்துள்ள உளவுத் தகவல். (அதை அவர்கள் தமக்கு நம்பிக்கையான நியூயார்க் டைம்ஸ் ஊடாக லீக் செய்திருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்)
மற்றொரு (மொசாத் சார்பு) உளவு வட்டார தகவலின்படி, இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள், சிரியா வான் பகுதிக்குள் வரவே இல்லை என்று அடித்து சொல்லப்படுகிறது. அவர்களது கூற்றின்படி, இஸ்ரேலிய விமானங்கள் மெடிட்டரேனியன் கடலின் கிழக்கு பகுதி மேலாக பறந்து, சிரியா எல்லைக்கு வெளியே பறந்தபடியே, வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் (air-to-ground missiles) மூலம் தாக்குதலை நடத்தின. இதுகூட சாத்தியம்தான். அப்படி தொலைவில் இருந்து தரை இலக்கை அடிக்கக்கூடிய சாதனங்கள் இஸ்ரேலிடம் உள்ளன. அவற்றை AGM precision-guided munitions என்று சொல்வார்கள். தமது விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று இஸ்ரேல் 3-வது தடவையாக மறுத்துள்ளது. ஆனால் தமாஷ் என்னவென்றால், இந்த தாக்குதல் நடந்த மறுநாளே, தாக்குதல் நடந்த வேர்ஹவுஸின் சாட்டலைட் இமேஜ்களை வெளியிட்டன, இஸ்ரேலிய மீடியாக்கள்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு கொடுக்காமல் அவை இஸ்ரேலிய மீடியாக்களுக்கு மட்டும் கிடைக்க சான்ஸ் இல்லை. அந்த இமேஜ்களில், குண்டு வந்து வீழ்வது, வெடிப்பது என்று முழு ஆக்ஷனும் பதிவாகியுள்ளது. இஸ்ரேல் தமக்கு இதில் தொடர்பு கிடையாது என்கிறது. ஆனால், துல்லியமாக அந்த நேரத்தில், அந்த இடத்தில் எடுக்கப்பட்ட சாட்டலைட் போட்டோக்களை வைத்திருக்கிறது!
Geen opmerkingen:
Een reactie posten