தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 februari 2012

பிள்ளையானுக்கு கோட்டா எறிந்த எலும்புத் துண்டு! - கருணா ஒரு மடையன் அல்லன்!!


கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான்தான் நியமனம் பெற வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரும், பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸ விரும்பி இருக்கின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிந்து வைத்து இருக்கின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கின்றார் என்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடுருவல் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கின்றமைக்கு பிள்ளையான் உடைய ஆயுத குழுவின் உதவி தேவையாக உள்ளது என்று காரணம் கூறி இருக்கின்றார் என்றும் தூதரகத்துக்கு தெரிய வந்து இருந்தது.

கிழக்கில் புலிகள் மீண்டும் ஊடுருவாமல் பிள்ளையானின் ஆயுத குழுவினர் பார்த்துக் கொள்கின்ற பட்சத்தில் வடக்கில் அரசின் இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்று கோட்டா அக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்றும் அமெரிக்கா அறிந்து இருந்தது.

பிள்ளையான் முதலமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமையில் கோட்டாபய ராஜபக்ஸவின் செல்வாக்கு பெரிதும் இருந்திருக்கின்றது என்றும் தூதரகம் கண்டு கொண்டது.

இது சம்பந்தப்பட்ட தகவல்களை பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் தூதரகத்துக்கு வழங்கி இருக்கின்றார்.

தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு மே 28 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன.
கருணா ஒரு மடையன் அல்லன்!
கருணா ஒரு மடையன் அல்லன் என்று அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார் ரோவின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் வி. இராமன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கிழக்கு மாகாண தளபதி கருணா உடைந்தமை தொடர்பாக அவதானிகளின் கருத்துக்களை பெற்று இருந்தது துணைத் தூதரகம்.

அப்போதே இராமன் கருணா ஒரு மடையன் அல்லன், பிரபாகரனின் வட மாகண படைக்கு எதிராக கிழக்கில் பாரிய அதிருப்தி வளர்வதை உணர்ந்து கொண்டுதான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி இருக்கின்றார், பிரபாகரனால் படுகொலை செய்யப்பட இருக்கின்றார் என்பதை சந்தேகத்துக்கு இடம் இன்றி உணர்ந்தபடியால்தான் உரிய நேரத்தில் ஒரு பலமான படையுடன் இயக்கத்தை விட்டு பிரிந்து இருக்கின்றார் என்று சொல்லி இருக்கின்றார்.

சென்னைத் துணைத் தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten