கல்விப் போராளி மேரியம்மா !!
மொழியால்,இனத்தால்,சாதியால்
19 நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில், அமெரிக்க நாட்டில் நிறபேதம் தலைவிரித்தாடிய ஒன்று....
எந்த வழியிலும் ஏற்றம் பெற முடியா ஒரு அடிமை நிலையிலேயே கறுப்பின மக்கள் வாழ்ந்து வர அடிமை சங்கிலிகளை உடைத்தெறிய மால்கம் எக்ஸ்,மார்டின் லூதர் கிங் என தலைவர்கள் போராடித்தான் வந்தனர்.அதில் கல்வி தளத்தில் , 'கருப்பு' பக்கங்களாகவே மாற்றப்பட்டு இருந்த கருப்பு மனிதர்களின் வாழ்வில் , மாற்றமெனும் புரட்சி முழக்கங்களை எழுத தொடங்கினார் ஓர் புரட்சி பெண்மணி.....
அவர் 'மேரி மெக்லியோட் பெத்யூன்'
அமெரிக்காவில் தென் பகுதியில் வாழும் கருப்பின மக்கள் அனைவரும் சுதந்திர மக்கள் என வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்த அந்த காலகட்டத்தில் தான் மேரியின் சிறு வயது பிரயாணம் தொடங்கியது...அதன் பின் அவரின் 79 ஆண்டுகளின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட 94 பக்கங்களில் சுருக்கமாக ஆனால் ஆழமாக வாசகர்களின் மனதில் பரவி பதிய செய்கிறது அவரைபற்றிய நூலான "உனக்குப் படிக்கத் தெரியாது" .
சிறு வயதில் ஒரு வெள்ளைக்கார மாளிகைக்கு புறவாசல் வழியாக செல்ல, அங்கே இருந்த வெள்ளைகார சிறுமி விளையாட கூப்பிடுகிறார்..தன் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் உளவியல் ஒடுக்குமுறையை சந்திப்போம் என அறியாமல் தான் விளையாட செல்கிறார் மேரி. அப்பொழுது அங்கே இருந்த ஒரு அழகிய புத்தகத்தை கையில் எடுத்து புரட்ட "புத்தகத்தை என்னிடம் கொடு!இதை நீ எடுக்க கூடாது!நீயெல்லாம் படிக்க கூடாது!" என பிடுங்குகிறார் வெள்ளைகார சிறுமி. இந்த ஒற்றை வாக்கியம் தான் மேரியின் வாழ்க்கையையே மாற்றி போட்டது.
"'நீயெல்லாம்' 'நீ' என்கிறாளே அப்படியென்றால் கருப்பினத்தினர் படிக்க கூடாதா?-கேள்விகள் துளைத்து கொண்டே இருக்க கல்வி ஒன்றே தான் நம் மக்களை மேம்படுத்தும் எனவே கல்வியால் வளர்வோம் கல்வியால் வளர்த்துவோம்" என்ற மேரியின் அன்றைய சூளுரை தான் பிற்பாடு அவரை மிக பெரிய கல்வி நிலையங்களை உருவாக்க வைத்தது.
தொடக்கத்தில் அவர் கட்டிய பள்ளி ஒரு குப்பை தொட்டியில் இருந்துதான் உருவானது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.ப்ளோரிடா மாகணத்தில் ஒரு ஆசிரியராக பணி புரிந்து வந்த மேரி ஒதுக்கப்பட்ட கருப்பின மக்கள் பயில ஒரு பள்ளியை உருவாக்கும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை கிடைக்கும் வருவாயில் சிறு தொகையை சேர்த்து வந்தவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை...ஒதுக்குபுற
பள்ளியை உருவாக்கி பின் 1907 சிலர் உதவியுடன் ஒரு புதிய கட்டிடமும் கட்டியாகிவிட்டது. 250 மாணவ செல்வங்களும் சேர்ந்துவிட, மகிழ்ச்சி என்றாலும் அவர்களுக்கு உணவு உடை வழங்க வேண்டும் என்ற நெருக்கடி கண் முன் நிற்க அதை சரிகட்டவே வயல் வெளியில் பல்வேறு விதமான காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டன. சிறுபகுதி விற்பனைக்கும் மற்றவை மாணவ செல்வங்களுக்கும் உணவானது.
'என் கருப்பினம் கல்வியில் மேலே வர வேண்டும் மேலே வர வேண்டும்' இதை மட்டுமே தாரக மந்திரமாய் உச்சரிக்க உச்சரிக்க நெருக்கடிகள் கறுப்பின மக்களின் வியர்வைகள் பட்டே தூள் தூளாயின.பள்ளி கட்டிடமாகி உயரவும் தொடங்கின.கல்வியில் மட்டுமல்ல சுகாதாரத்திலும் கூட கருப்பின மக்கள் துன்பப்பட்டனர், ஒரு முறை ஒரு மருத்துவமனையில் கருப்பினத்தவர் என்பதாலேயே சாக கிடந்த ஒரு நோயாளியை சேர்க்கவில்லை. மேரியம்மா சென்று அவரை போராடி சேர்த்து வர,பின் ஓரிரு நாட்களில் திரும்பி சென்று அங்கே பார்த்தால் மாட்டு கொட்டைகையை விட மோசமான ஒரு இடத்தில அந்த நோயாளி கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார் காரணம் கருப்பு நோயாளி தங்களுடன் இருப்பதை வெள்ளை நோயாளிகள் விரும்பவில்லையாம். நோயில் கூட நிற பேதமா? நோய் உடலில் இல்லை வெறிபிடித்த வெள்ளை உள்ளங்களில் இருந்தது நிற வெறி எனும் சீழ் பிடித்து....
ஆழ பாதிக்க, மேரியம்மா தனது அயராத உழைப்பை செலுத்தி ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். கல்வி நிலையத்தில் கருப்பின மக்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்த மேரியம்மா தன் மருத்துவமனையில் வெள்ளை இனத்தவரும் வந்து சிகிச்சை பெறலாம் என்றார்.இதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே உண்டான மனிதநேயம்...
அவர் தூங்குவது நாள் ஒன்றுக்கு நாலு மணி நேரம் தான்.அயராது உழைத்தார் தம் இனத்தின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்தார்.
'கற்று கொள்வதற்காக உள்ளே வருக!
சேவை செய்வதற்காக வெளியே செல்க' - மேரியின் கல்வி நிலையத்தில் , உள்ளே-வெளியே என்ற இரண்டு வாசல்களிலும் எழுதப்பட்ட வாசகம்.
கற்றுக்கொண்டும் , சேவை செய்துகொண்டும் இருந்த மேரியம்மா ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்தப்பட்ட போதும் கூட " எனது மருத்துவர்கள் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்கின்றனர் ஆனால் கறுப்பின பெண்களும்,பைய்யன்களும் முழுமையான கல்வியை பெரும் வரை தங்களுடைய பெறுமானத்தை தகுதியை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு தேவை என்று இருக்கும்வரையில் நான் ஒருபோதும் ஓய்வெடுக்க முடியாது " என சேவையை தொடர திரும்பிய மேரியம்மாவிற்கு 1955 ஆம் ஆண்டு 18 ஆம் நாள் நிரந்தர ஓய்வை திணித்தது இயற்கை.
Geen opmerkingen:
Een reactie posten