பொருளாளர் முக.ஸ்டாலின் திருச்சியில் ஆற்றிய உரை:
அங்கு அவர் தொடர்ந்து பேசியதாவது,
டெசோ அமைப்பு ஏதோ இன்றைக்கு நேற்று உருவானதல்ல. 1984-ல் டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1984, 1986-ல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பித்து, உலகம் முழுவதும் மனித உரிமைத் தளத்தில் செயல்படும் பல்வேறு அறிஞர்களை சென்னையில் கூட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்துள்ளோம். அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஜெனிவா போன்ற நாடுகளுக்கு நானும், டிஆர். பாலுவும் நேரில் சென்று ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து உலகநாடுகளின் ஆதரவைக் கோரியுள்ளோம். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர் நலனுக்காக திமுக தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சியில் இருந்த போது பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதாதான் இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தமிழர் முழக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலரும் இன்று திமுகவைக் குறை சொல்கின்றனர். அரசியல் பேச விரும்பவில்லை.
எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றார். தனி ஈழம் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு-பொன் முத்துராமலிங்கம்
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தனி ஈழம் தான் தீர்வாக இருக்க முடியும் என நெல்லையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் தீர்மானக்குழு தலைவர் பொன் முத்துராமலிங்கம் கூறினார்.
டெசோ அமைப்பின் சார்பில் தீர்மானத்திற்கு இணங்க ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக மத்திய அரசை வலியுறுத்தி நெல்லை மாவட்ட திமுக சார்பில் நெல்லை சந்திப்பில் ஆர்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தீர்மானக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளை பதிவு செய்து அதன் அடிப்படையில் தனி ஈழம் என்பது தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு. 13வது அரசியல் சட்ட திருத்தத்தினை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கச்சதீவில் மீன்பிடிப்பதற்கும், மீனவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் உரிமை உள்ளது என்பதற்கு சட்டம் உள்ளது. இதையும் மத்திய அரசு அக்கரையில் எடுத்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் மத்திய அரசு காப்பாற்ற தவறினால் இந்த போராட்டம் பல்வேறு வடிவம் பெறும். டெசோ போராட்டம் வெற்றி பெறும் என்றார் அவர்.
09 August, 2013 by admin
Geen opmerkingen:
Een reactie posten