தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

நள்ளிரவுக்கு பின் ஊடுருவிய பாக்.ராணுவம் !




பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையை கடந்து, இந்திய நிலைகள் மீது அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரங்களின் தகவலின்படி, நேற்று(திங்கட்கிழமை) நள்ளிரவு கடந்த நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி யாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைக்கு உட்பட்ட சர்லா போஸ்ட் காவலரணில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ளார். “இதுபோன்ற தாக்குதல்கள், பாகிஸ்தானுடன் எமக்கு உள்ள ராஜதந்திர உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய இந்த தாக்குதலால் எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங், இந்த தாக்குதல் செய்தியால் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளில் பெரிய தாக்கத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங், பாக். பிரதமர் நவாஸ் ஷரிஃப்பை நியூயார்க்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தின் பின் இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தினர் இரண்டு பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் தலையை துண்டித்துக் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தான் ராணுவத்தின் அந்த செயலை உலக நாடுகள் கண்டித்தது.
ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அதை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது இந்திய நிலைகள் மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய இராணுவம் தகுந்த நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்குமா ? இல்லை என்றால் காந்தீய வழி தான் எங்கள் வழி என்று கூறி மறு கன்னத்தை காட்டுமா ? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten