கொழும்பிற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கென தலவாக்கலை பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்ட மூன்று பெண்கள் குடும்பத்தாருக்கு தெரியாத வகையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக குறித்த பெண்களினது குடும்பத்தார் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ள அதேவேளை, இது தொடர்பில் தலவாக்கலை- லிந்துலை பொலிஸாருக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.
பத்திரிகை ஒன்றில் வெளியான விளம்பரத்தை நம்பியே மேற்படி மூன்று பெண்களும் கொழும்பிற்கு வேலைவாய்ப்பு தேடி வந்துள்ளனர்.
தலைவாக்கலையிலுள்ள டீமலை, ட்ருப், இராணிவத்தை ஆகிய தோட்டப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்கள் 30,000 ரூபா மாத சம்பளம், உடனடி வேலைவாய்ப்பு என்ற பத்திரிக்கை விளம்பரத்தினை நம்பி கொழும்புக்கு வேலைக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வீட்டு உரிமையாளர்கள் 3 பெண்களுக்கும் ஆசைவார்த்தைகளை காட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி மூன்று பெண்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உறுதி செய்துள்ளது.
எனினும், அவர்கள் எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர், எங்கு வேலை பார்க்கின்றனர் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 06:14.36 AM GMT ]
Geen opmerkingen:
Een reactie posten