தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 34 நாடுகள் தடை செய்வதற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் எனவும் இலங்கையின் உண்மை நிலையை சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்தியவர் அவரே எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8 வது நினைவு தின நிகழ்வுகளில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையின் முதலாவது தமிழ் வெளிவிவகார அமைச்சர் என்ற பெருமை பெற்றவர். தமிழ் கலாசாரத்தை நேசித்ததோடு அனைத்து கலாசாரங்களையும் மதித்துச் செயற்பட்டவார்.
சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பில் உலகில், கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அவர், இதனைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியில் முன்னின்று செயற்வட்டவராவர்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற போர்வையில் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் பங்குபற்றவில்லை. வேறு உள்நோக்கங்களை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுவதற்காகவே வெறுமனே பேச்சுவார்த்தைகளில் முகங்களைக் காட்டினர். இதனை அமைச்சர் கதிர்காமர் புரிந்து கொண்டார். இதனாலேயே அவர் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இலங்கையின் உண்மை நிலையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சென்ற கதிர்காமர் அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றிலும் புலிகளைத் தடை செய்வது தொடர்பில் வலியுறுத்தியிருந்தார்.
நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளை உலகறியச் செய்து, உண்மை நிலையை சர்வதேச நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் லக்ஷ்மன் கதிர்காமரின் பங்கு அளப்பெரியது.
இலங்கையில் பணியாற்றிய ஒரேயொரு தமிழ் வெளிவிவகார அமைச்சர். தமிழ் கலாசாரத்துக்கு மட்டுமன்றி ஏனைய கலாசாரங்களுக்கும் மதிப்பளித்த நபராக அவர் காணப்பட்டார்.
இலங்கையின் இனப்பிரச்சினையானது பரஸ்பர பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என நம்பினார். அதுவும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தீர்வுத் திட்டங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. உள்நாட்டுக்குள் பேச்சுவார்த்தை மூலம் காணப்படும் தீர்வே ஸ்திரமான தீர்வாக அமையும் என்பதில் அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten