தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 april 2013

இலங்கை தூதருக்கே சென்னை செல்ல விசா இல்லை !




கொழும்பு அரசு வட்டாரங்களில் தற்போது அடிபடும் மிக ஆச்சரியமான ஒரு தகவல், இலங்கை துணை தூதருக்கு சென்னை வருவதற்கு புதுடில்லி இன்னமும் விசா கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்பது !

இது சும்மா கதையா, அல்லது நிஜமா என்று விசாரித்தால், நிஜம்தான் என்றே தெரிகிறது.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு புதிய தூதர் ஒருவரை அனுப்பி வைக்க முடிவு செய்த இலங்கை அரசு, அதற்காக ஒருவரை தேர்ந்தெடுத்தது. அவரது பெயர் ஏ.சப்ரூல்லா கான். தற்போது சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் துணை தூதராக பணியில் இருப்பவர், அமீர் அஜ்வாத். இவரது நியமனம், தற்காலிக நியமனம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.சப்ரூல்லா கான் சென்னை வந்ததும், இவர் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.

ஏ.சப்ரூல்லா கான் புதிய தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட விபரத்தை டில்லிக்கு அறிவித்த இலங்கை அரசு, அவருக்கான ராஜதந்திரி விசாவுக்கு விண்ணப்பித்தது. பொதுவாக ஒரு வாரத்துக்கு உள்ளேயே ராஜதந்திர விசா டில்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு விடும். ஆனால், சென்னைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரின் விசா இன்னமும் டில்லியில் இருந்து அனுப்பி வைக்கப்படவில்லை. சரி. இலங்கை எப்போது ராஜதந்திரி விசாவுக்கு விண்ணப்பித்தது? கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்! 3 மாதங்களுக்கு மேலாகியும், புதுடில்லி இன்னமும் விசா வழங்கவில்லை. கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தொடர்பு அதிகாரி பிரேந்தர் சிங் யாதவ்விடம் இது தொடர்பாக கேட்டபோது, “ராஜதந்திரிகளுக்கான விசா டில்லியில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஏனோ, இன்னமும் அனுப்பவில்லை. இதற்கு மேல் நாம் சொல்வதற்கு ஏதுமில்லை” என்கிறார்.

இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளிடம் விசாரித்தால், “இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. புதுடில்லி, வழமையாக இது போல கால தாமதத்தை ஏற்படுத்தியதில்லை. எமது புதிய தூதருக்கு விசா கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது, ‘இல்லை’ என்ற பதில்கூட டில்லியில் இருந்து வரவில்லை” என்கிறார்கள். சென்னைக்கான இலங்கை தூதருக்கு விசா கொடுக்காமல் புதுடில்லி இழுத்தடிப்பதில், ‘ஏதோ’ விஷயம் இருக்கிறது. மர்மமான நடவடிக்கையாக அல்லவா இருக்கிறது…

குறிப்பிட்ட நபர் வேண்டாம் என்கிறார்களா? அல்லது, இலங்கை தூதரகமே சென்னையில் வேண்டாம் என முடிவு செய்ய போகிறார்களா.. தெரியவில்லை. கொஞ்சம் பொறுங்கள், கொழும்புவிலும், டில்லியிலும் இன்னமும் சற்று தூண்டில் விட்டு பார்க்கலாம்… ஏதாவது மீன் சிக்கும்!!


Geen opmerkingen:

Een reactie posten